கும்பகோணம் தொகுதிக்கு உட்பட்ட சேஷம்பாடி கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லத்திற்கான பணிகள் தொடங்குவதற்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், ராஜ்யசபா எம்.பி கல்யாணசுந்தரம், கும்பகோணம் எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன், அரசு அதிகாரிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கல்யாணசுந்தரம் எம்.பி உரையாற்றினார். அப்போது, "அரசு எவ்வித திட்டம் போட்டாலும், அரசுக்கு நற்பெயரை வாங்கிக்கொடுப்பது அரசு அதிகாரிகள் தான். கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பெரியவர் ஒருவர், கும்பகோணத்தில் முறையான குடிநீர் இல்லை, சாலை வசதி இல்லை, தெரு விளக்கு இல்லை என சண்டை போட்டார்.
அதற்கு எல்லாம் உடனே தீர்வு கிடைத்து விடாது. திருமணம் ஆனால் கூட பத்து மாதத்திற்குப் பிறகு தான் குழந்தை பிறக்கும். திருமணத்திற்கு முன்பே, திருமணம் நடக்கின்ற அன்றே குழந்தை பிறக்க வேண்டும் என்றால், அது வேறு விதமாகத் தான் பிறக்கும். முன் கூட்டியே காதல் செய்து, கர்ப்பமானால் திருமணம் ஆகும் அன்றே குழந்தை பிறக்கும்.
எனவே, மக்களைத் தேடி வருபவர்களிடம் ஆத்திரப்பட்டுப் பேசுவதால், கோபப்பட்டுப் பேசுவதால், திட்டி பேசுவதால் நல்ல விஷயங்கள் செய்ய வருபவர்களுக்கு ஆர்வம் குறைந்துவிடும். அவர்களிடம் அனுசரித்து, 'வேலை எல்லாம் செய்து கொடுங்கள்'னு கேட்கனுமே தவிர, விதண்டாவாதமாகப் பேசக்கூடாது.
உங்களுக்கு வீடுகள் கட்டி தர வேண்டும் எனச் சட்டம் இல்லை. உங்களின் தேவைகளை அறிந்து கடமையைச் செய்ய வந்துள்ளோம்" எனப் பேசினார். ஏற்கனவே, கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்கள் குறித்து அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையான நிலையில் தற்போது, தி.மு.க எம்.பி ஒருவர் மேலும் சர்ச்சையை கிளப்பும் விதமாக பேசியுள்ளார்.
செய்தி - க. சண்முகவடிவேல்
source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-mp-controversial-speech-at-kumbakonam-8980821