/indian-express-tamil/media/media_files/2026/01/10/neet-ug-2026-syllabus-2026-01-10-21-27-15.jpg)
நீட் தேர்வர்கள் கவனத்திற்கு... 2026- க்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு; பதிவிறக்கம் செய்வது எப்படி?
2026-ம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வான நீட் (NEET UG 2026) பாடத்திட்டத்தை தேசிய தேர்வு முகமை (NTA) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
முன்னதாக, தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) கீழ் இயங்கும் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் (UGMEB) கடந்த 2025 டிசம்பர் 22 அன்று இந்த பாடத்திட்டத்தை அறிவித்திருந்தது. தற்போது, மாணவர்களின் வசதிக்காகவும், குழப்பங்களைத் தவிர்க்கவும் NTA தனது இணையதளத்தில் (neet.nta.nic.in) இதனை அதிகாரப்பூர்வமாகப் பதிவேற்றியுள்ளது.
2026-ம் ஆண்டு நீட் தேர்வு முற்றிலும் தேசிய மருத்துவ ஆணையம் (NMC) வழங்கியுள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே நடத்தப்படும். மாணவர்கள் தயாரிப்பின் போது இந்த அதிகாரப்பூர்வ பாடத்திட்டத்தை மட்டுமே பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
எங்கு பார்க்கலாம்?
மாணவர்கள் பாடத்திட்டத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளம் (nmc.org.in) அல்லது NTA-வின் நீட் இணையதளத்தில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். முன்னதாக ஜனவரி 5-ம் தேதி, விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் விவரங்களை புதுப்பிக்குமாறு தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.
தேர்வு எப்போது?
பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, நீட் 2026 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2025-ம் ஆண்டு மே 4-ம் தேதியும், 2024-ம் ஆண்டு மே 5-ம் தேதியும் நீட் தேர்வுகள் நடைபெற்றன. அந்த அடிப்படையில், இந்த ஆண்டும் மே முதல் வாரத்தில் தேர்வு நடைபெற வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் MBBS, BDS மற்றும் இதர இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான ஒரே தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நீட் (NEET UG) ஆகும். மாணவர்கள் மேலதிக தகவல்களுக்கும், அடுத்தக்கட்ட அறிவிப்புகளுக்கும் nta.ac.in மற்றும் neet.nta.nic.in ஆகிய இணையதளங்களைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
source https://tamil.indianexpress.com/education-jobs/nta-uploads-neet-ug-2026-syllabus-link-at-neetntanicin-10988251





