ஞாயிறு, 11 ஜனவரி, 2026

ஊழல், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு புதுவையில் மகளிர் காங்கிரஸ் போராட்டம்:

 Puducherry Mahila Congress Protest Fake Medicine Scam Puducherry Pongal Gift Electric Bus Corruption Puducherry BJP

Puducherry

புதுச்சேரி மாநிலத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுதல், கலாச்சாரத்தைச் சீரழிக்கும் ரெஸ்டோபார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்னிறுத்தி, மகளிர் காங்கிரஸ் மற்றும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் இன்று (ஜனவரி 10) ஆளும் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
        
புதுவை மாநில மகளிர் காங்கிரஸ் சார்பில், அண்ணாசிலை அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. மகளிர் காங்கிரஸ் தலைவி நிஷா தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், பெண்கள் தங்கள் வாயில் கறுப்புத் துணி கட்டிக்கொண்டு அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் கூறுகையில்: “புதுவையில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு இல்லை. இதை ஆளும் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக அரசு கண்டும் காணாமல் இருக்கிறது.

குடும்பங்கள், பள்ளிகள், கோயில்கள் அருகே ரெஸ்டோபார்களின் எண்ணிக்கையை அதிகரித்து, கலாச்சாரத்தைச் சீரழிக்கிறது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

ரெஸ்டோபார்களின் உரிமத்தை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், புதிதாக எந்தவொரு ரெஸ்டோபாருக்கும் அனுமதி வழங்கக் கூடாது.

மேலும் பொங்கல் பரிசாக ரூ.5,000 தரப்போவதாக அரசு நாடகமாடுகிறது. ஆனால், அதற்கான கோப்பு திருப்பி அனுப்பப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆகவே, வேலையில்லாமல் கஷ்டப்படும் மக்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகையை ரூ.10 ஆயிரமாக வழங்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினர்.

WhatsApp Image 2026-01-10 at 5.43.50 PM (2)

அடுத்து, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் பேசியதன் விவரம்

"புதுச்சேரி மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து தற்போது கொலை மற்றும் போதை நகரமாக மாறிவிட்டது என்று நாங்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறோம்.

கஞ்சா விற்பனை எங்கும் நடக்கிறது. கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களைக் குறிவைத்துக் கஞ்சா விற்கப்படுகிறது. கஞ்சா எங்கிருந்து வருகிறது, எங்கு விற்கப்படுகிறது என்று புதுவை காவல்துறைக்குத் தெரியும். ஆனால், மாமூல் பெறுவதால், போலீஸார் இதைக் கண்டுகொள்வதில்லை. தவளக்குப்பத்தில் கஞ்சா போதையில் மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதிலிருந்தே, புதுவை நகரம் கஞ்சா நகரமாக மாறியுள்ளது தெளிவாகிறது.

தமிழகத்தில் அறிவித்த திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றனர். ஆனால், புதுவையில் முதலமைச்சர் திட்டங்களை அறிவிப்பார்; ஆனால், செயல்படுத்த மாட்டார். ரேஷன்கடைகளைத் திறந்து அரிசி, மளிகைப் பொருட்களைத் தருவோம் என்றார். இதுவரை ரேஷன்கடைகளைத் திறக்கவில்லை, பொருட்களையும் வழங்கவில்லை. மகளிர் உதவித்தொகையும் முழுமையாகச் சென்றடையவில்லை.

எலக்ட்ரிக் பஸ்களுக்கு முழுமையாக அரசு முதலீடு செய்தபோதும், எந்த முதலீடும் இல்லாமல் தனியார் இயக்கத்திடம் அளித்துள்ளனர். இதில் ஊழல் நடந்துள்ளது. பி.ஆர்.டி.சி. மூலம் அரசே எலக்ட்ரிக் பஸ்களை இயக்க வேண்டும். இந்த ஊழல் குறித்து விசாரிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்.

போலி மருந்து விவகாரத்தில், உயர் நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் சி.பி.ஐ. முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி ஆளுநரிடம் புகார் அளித்தோம். தற்போது போலி மருந்து வழக்கில் தொடர்புடைய 26 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த ஜாமீனுக்கு ஆட்சியாளர்களே உறுதுணையாக இருந்து, முறையான விசாரணை நடக்காமல் இருக்கக் குறியாக உள்ளனர். இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் சார்பில் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம்," என்று நாராயணசாமி தெரிவித்தார்.



source https://tamil.indianexpress.com/india/puducherry-mahila-congress-protest-fake-medicine-scam-puducherry-pongal-gift-electric-bus-corruption-puducherry-bjp-10987905