/indian-express-tamil/media/media_files/5BHGko8pe3Je7CBg8k8O.jpg)
பிரேசிலை சேர்ந்த பிரபல விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான 'எம்ப்ரேயர்' மற்றும் இந்தியாவின் 'மகிந்திரா' நிறுவனம் இணைந்து, 'சி-390 மில்லேனியம்' (C-390 Millennium) வகை ராணுவப் போக்குவரத்து விமானங்களைத் தயாரிப்பதற்கான திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய விமானப் படையின் நடுத்தர போக்குவரத்து விமானங்களுக்கான ஒப்பந்தத்தைப் பெறும் பட்சத்தில், இந்த விமானங்களை ஒருங்கிணைத்து தயாரிப்பதற்கான இறுதி அசெம்ப்ளி மையத்தை அமைப்பதற்கு இந்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
இந்தத் தயாரிப்பு மையத்தை அமைப்பதற்காக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் பகுதியைத் தேர்வு செய்துள்ளதாகவும், அதற்காக அம்மாநில அரசுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி இரு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தன. நாக்பூரில் அமையவுள்ள இந்த மையம் விமானப் பாகங்களை ஒன்றுசேர்ப்பது, அமைப்புகளை ஒருங்கிணைப்பது மற்றும் புதிய தொழில்நுட்ப மேம்பாடுகளைச் செய்வது ஆகிய பணிகளை மேற்காள்ளும்.
ஏற்கனவே விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் துறையில் வலுவான உள்கட்டமைப்பையும், திறமையான பொறியாளர்களையும் கொண்டுள்ள தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய இந்த வாய்ப்பு மகாராஷ்டிராவிற்கு கைமாறியிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, "முதலீடுகளும் பெருந்திட்டங்களும் தானாகவே ஒரு மாநிலத்திற்கு வந்துவிடாது. அதற்குத் தொடர்ச்சியான முயற்சிகளும், தீவிரமான அரசு அளவிலான தொடர் கண்காணிப்பும் மிக அவசியம். இந்தத் திட்டம் தொடர்பாக எம்ப்ரேயர் நிறுவனத்திடம் தமிழ்நாட்டின் தொழில் வளம் மற்றும் சாதகமான சூழல்கள் குறித்து முன்பே விளக்கப்பட்டது. ஆனால், தற்போதைய அரசு சரியான முறையில் மேல்நடவடிக்கை எடுக்காததால் தமிழ்நாடு இந்த வாய்ப்பை இழந்துள்ளது" என்று தனது சமூக வலைதளப் பதிவில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், இத்திட்டத்திற்குத் தேவையான நிலம் மற்றும் பிற உள்கட்டமைப்பு வசதிகளை உடனடியாகச் செய்து தர மகாராஷ்டிரா அரசு காட்டிய வேகமே அந்நிறுவனங்கள் நாக்பூரைத் தேர்வு செய்ய முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. இந்திய விமானப் படையின் ஒப்பந்தம் இந்த நிறுவனங்களுக்குக் கிடைக்கும் பட்சத்தில், உள்நாட்டு விண்வெளி நிறுவனங்களுக்குப் பெரிய அளவிலான தொழில் வாய்ப்புகளும் வேலைவாய்ப்புகளும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய மிகப்பெரிய தொழில் வாய்ப்பைத் தமிழ்நாடு தவறவிட்டிருப்பது, மாநிலத்தின் முதலீட்டு ஈர்ப்பு நடவடிக்கைகள் குறித்த புதிய அரசியல் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
05 10 2026
source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-loses-c390-aircraft-project-to-maharashtra-trb-rajaa-12623373





