சனி, 8 மார்ச், 2025

வருமான வரித் துறையினர் இனி தனிநபர் இமெயில், சமூக வலைத்தளங்களை அனுமதியின்றி ஆய்வு செய்ய முடியும்!

 

வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 132 இன் படி, வருமான வரி அதிகாரிகள் ஒரு தனிப்பட்ட நபர் மீது வரி ஏய்ப்பு மற்றும் கணக்கில் காட்டாத  சொத்துகளை வைத்திருப்பதாக புகார் வந்தால்,  ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்குகளை ஆய்வு செய்யவும் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் எந்த ஒரு லாக்கர், பூட்டுகளை உடைப்பதற்கான அதிகாரங்களை உள்ளடக்கிய விதிகள் நடைமுறையில் உள்ளது.

இந்த நிலையில் வருமான வரி துறை புதிய விதிகள் நடைமுறைக்கு வரவுள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் புதிய வருமான வரி மசோதா  2025 தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மசோதா வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதனால் வருமான வரித்துறையின் விதிகள் மாற உள்ளது.

வருமான வரி மசோதா 2025 இன் பிரிவு 247இன் படி, வருமான வரி அதிகாரிகள் ஒருவர் மீது வரி ஏய்ப்பு சந்தேகம் இருக்கும் பட்சத்தில் அவரின் இமெயில், சமூக வலைத்தள கணக்குகள், வங்கிக் கணக்களை ஆகியவற்றை சோதனை செய்ய முடியும்.  இது விடிஎஸ் (virtual digital space) என்று அழைக்கப்படுகிறது.

இந்த விடிஎஸ் செயல்பாடு குறித்து இன்ஃபோசிஸின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி மோகன்தாஸ் “தனிநபர் உரிமைகள் மீதான தாக்குதல்” என்று குற்றம் சாட்டினார். அதே போல் கேஸ் லீகல் அண்ட் அசோசியேட்ஸின் நிர்வாக பங்குதாரரான சோனம் சந்த்வானி ஆங்கிலப் பத்திரிக்கையில் , “கணக்கில் காட்டாத டிஜிட்டல் சொத்துக்களைத் தடுப்பதற்கான ஒரு நடவடிக்கையாக இது இருந்தாலும் தனிநபர் கணக்கு மற்றும் தனியார் டிஜிட்டல் இருப்பின் மீது கட்டுப்பாடற்ற கண்காணிப்பை அனுமதிக்கும் வகையில் இருக்கிறது” என்று   குற்றம் சாட்டினார்.


source https://news7tamil.live/income-tax-officials-can-no-access-personal-emails-and-social-media-without-permission.html