வெள்ளி, 4 ஏப்ரல், 2025

சீன எல்லைப் பிரச்சினை; அமெரிக்காவின் வரி விதிப்பு: மத்திய அரசு மீது ராகுல் கடும் தாக்கு

 4 4 25 


Rahul Gandhi Central govt China territory tariffs US Tamil News

"நமது வெளியுறவுச் செயலாளர் சீனத் தூதருடன் கேக் வெட்டுவதைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். சீனா நமது நாட்டின் 4,000 சதுர கி.மீ. பகுதியில் அமர்ந்திருக்கிறது. இது அனைவரும் அறிந்த உண்மை." என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

சீனாவுடனான எல்லைப் பிரச்சினை மற்றும் அமெரிக்காவின் (நட்பு நாடு) வரி விதிப்பு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று வியாழக்கிழமை மத்திய அரசைக் கடுமையாக சாடினார்.

நாடாளுமன்ற மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் பேசிய ராகுல் காந்தி, "நமது நாட்டின் 4,000 சதுர கி.மீ. பகுதியை சீனா கையகப்படுத்தி இருக்கிறது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயம். ஆனால், நமது வெளியுறவுச் செயலாளர் சீனத் தூதருடன் கேக் வெட்டுவதைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். சீனா நமது நாட்டின் 4,000 சதுர கி.மீ. பகுதியில் அமர்ந்திருக்கிறது. இது அனைவரும் அறிந்த உண்மை.


இந்தப் பிரதேசத்தில் சரியாக என்ன நடக்கிறது என்பதுதான் கேள்வி. 20 ராணுவ வீரர்களின் உயிர் தியாகம் செய்துள்ளனர். அவர்களின் தியாகம் தற்போது கேக் வெட்ட ப்பட்டு கொண்டாடப்படுகிறது. நாங்கள் இயல்பு நிலைக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் இயல்பு நிலைக்கு முன், தற்போதைய நிலை இருக்க வேண்டும். நமது நிலத்தை நாம் திரும்பப் பெற வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு இருவரும் சீன அரசுக்கு கடிதம் எழுதியிருந்தனர். ஆனால், இதைப் பற்றி சீன தூதரிடமிருந்து தான் இந்தியாவில் உள்ள மக்கள் அறிந்து கொண்டனர்.  வெளியுறவுக் கொள்கை என்பது வெளி நாடுகளை நிர்வகிப்பது பற்றியது. நீங்கள் சீனாவிற்கு நிலத்தை கொடுத்துவிட்டீர்கள். திடீரென்று, நமது கூட்டாளி (அமெரிக்கா) நம் மீது வரிகளை விதிக்க முடிவு செய்துள்ளது. இது நமது பொருளாதாரத்தை முற்றிலுமாக அழிக்கப் போகிறது. நமது ஆட்டோமொபைல் தொழில், மருந்து மற்றும் விவசாயத் தொழில் என அனைத்தும் ஆபத்தில் உள்ளன. 

பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு வெவ்வேறு தத்துவம் உள்ளது. அவர்கள் ஒவ்வொரு வெளிநாட்டவருக்கும் முன்பாக தலை வணங்குகிறார்கள். அது அவர்களின் கலாச்சாரத்தில் இல்லை. ஆனால் அரசாங்கமாக, நீங்கள் என்ன செய்கிறீர்கள். நமது கூட்டாளி நம் மீது விதித்த வரிக்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.  

ராகுல் காந்தியின் கருத்துக்களுக்கு பா.ஜ.க தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் எழுந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, முன்னாள் மத்திய அமைச்சரான அனுராக் தாக்கூர், காங்கிரஸ் ஆட்சி காலத்தின்  போதுதான் இந்தியா-சீனா எல்லையில் இந்தியப் பகுதி இணைக்கப்பட்டது என்று குற்றம் சாட்டினார்.

மேலும், ராகுல் சுட்டிக்காட்டிய அனைத்து தவறுகளும் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் கொள்கைகள் மற்றும் அவரது காலத்தில் நடந்தவை என்றும், ராஜீவ் காந்தி அறக்கட்டளை சீனாவிலிருந்து நிதியைப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் அவர் குறிப்பிட்டார். "சீனாவிலிருந்து நன்கொடைகளை ஏன் ஏற்றுக்கொண்டீர்கள் என்பதை நீங்கள் இன்னும் விளக்கவில்லை" என்று அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டினார்.

source https://tamil.indianexpress.com/india/rahul-gandhi-central-govt-china-territory-tariffs-us-tamil-news-8921396

Related Posts: