வெள்ளி, 17 நவம்பர், 2023

நவ. 18-ல் சட்டப்பேரவை சிறப்பு கூட்டம்; ஆளுநர் நிராகரித்த மசோதக்கள் மீண்டும் நிறைவேறும் - சபாநாயகர் அப்பாவு

 Appavu 1

தமிழக சட்டப் பேரவை சிறப்புக் கூட்டம் நவம்பர் 18-ம் தேதி நடைபெறும் - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

தமிழக சட்டப் பேரவை சிறப்புக் கூட்டம் நவம்பர் 18-ம் தேதி நடைபெறுவதாக சபாநாயகர் அப்பாவு வியாழக்கிழமை அறிவித்தார். இந்த சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில், ஆளுநர் நிராகரித்த மசோதாக்களை தமிழ்நாடு அரசு மீண்டும் நிறைவேற்ற விரும்புவதால் இந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு திருவண்ணமலையில் வியாழக்கிழமை (16.11.2023) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: “அவசர சட்டப்பேரவைக் கூட்டம், சனிக்கிழமை கூட்டப்படுகிறது. இந்த கூட்டத்தில், நீதிமன்ற உத்தரவு குறித்தோ, ஆளுநர் குறித்தோ, குடியரசுத் தலைவர் குறித்தோ விவாதிக்கப்படாது. தமிழக அரசு சட்ட மசோதாக்களை ஆளுநருக்கு அனுப்பியிருந்தது. ஆளுநர் அதை திருப்பி அனுப்பியிருக்கிறார். மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப அரசு விரும்புகிறது. இதனால், அவசர சட்டப்பேரவைக் கூட்டம் நாளை மறுநாள் கூட்டப்படுகிறது. அதில் என்னென்ன விசயங்கள் விவாதிக்கப்படும் என்பதை அரசுதான் தீர்மானிக்கும்” என்று கூறினார்.

சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் காலதாமதம் செய்யக்கூடாது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது தொடர்பாக செய்தியாளர்கள் சபாநாயகர் அப்பாவு-யிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு,  “ஏற்கெனவே உள்ள சட்ட விதிகளின்படி, சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பக்கூடிய மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி அளித்து, குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். அதில் ஏதேனும் நிறைகுறைகள் இருக்கும்பட்சத்தில், மாநில அரசுக்கு திருப்பி அனுப்பிவைக்க வேண்டும்.

ஆளுநர் தற்போது நிலுவையில் இருந்த சட்ட மசோதாக்களைத் திருப்பி அனுப்பியிருக்கிறார். அதற்கு நீதிமன்ற கருத்துகூட காரணமாக இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. எனவே, நீதிமன்றம், ஆளுநர், குடியரசுத் தலைவர் குறித்த விவாதம் எல்லாம் சட்டப்பேரவையில் இருக்காது. சட்டப்பேரவையில் மசோதாக்களை அரசு கொண்டுவரும். அதுகுறித்து விவாதித்து, தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைப்பதுதான் வேலையாக இருக்கும்.

விதிப்படி, ஆளுநர் ஒரு சட்ட மசோதாவை திருப்பி அனுப்பினால், மீண்டும் அந்த மசோதாவை அரசு நிறைவேற்றிக் கொடுத்தால், நிச்சயமாக ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த நடைமுறை அனைவருக்கும் தெரியும். ஆன்லைன் ரம்மிக்கு தமிழக சட்டப்பேரவையில் ஒரு மசோதா நிறைவேற்றினோம். அதில், ஒரு புள்ளி, கமாகூட மாறாமல் சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். அதற்கு அவர் அனுமதி தரவில்லை.

அதுவும் இதுபோல பிரச்சினைகள் வந்து, மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். அதன்பிறகு ஆளுநர் அனுமதி கொடுத்தார். அதுபோலத்தான் நீட் மசோதா, அதுவும் ஆளுநருக்கு இரண்டாவது முறையாக அனுப்பிவைத்த பிறகுதான், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்” என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.  


source https://tamil.indianexpress.com/tamilnadu/speaker-appavu-announced-tn-assembly-special-session-on-saturday-to-re-pass-bills-sent-by-governor-1697836