வெள்ளி, 24 நவம்பர், 2023

இஸ்ரேலுக்கு எதிராக குரல் கொடுத்த ஹாலிவுட் நடிகைகளுக்கு வாய்ப்பு மறுப்பு!

 

இஸ்ரேலுக்கு எதிராக குரல் கொடுத்த ஆஸ்கர் விருது வென்ற சூசன் சரண்டன் மற்றும் ஸ்க்ரீம் பட  நடிகை மெலிசா பாரேரா  இருவரும் தாங்கள் நடித்து வந்த படங்களிலிருந்து நீக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கிய ஹமாஸ்- இஸ்ரேல் போரானது  ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.  பல முறை தற்காலிக சண்டை நிறுத்தத்திற்கு சர்வதேச சிவில் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்தும் அதற்கு இஸ்ரேல் செவிசாய்க்கவில்லை.  இஸ்ரேல், காஸா மீது நடத்தி வரும் தாக்குலில் இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட  13,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

காஸா மக்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு எதிராக பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  பல திரைப்பிரபலங்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில்,  5 முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவரும்,  ஒருமுறை ஆஸ்கர் விருது வென்றவருமான சூசன்,  நியூயார்க்கில் கடந்த வாரம் நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு பேரணியில் கலந்து கொண்டார்.  அப்பேரணியில் பேசிய சூசன், “இந்த நேரத்தில், யூதர்களாக இருக்கவே பயப்படுபவர்கள் நிறைய பேர் உள்ளனர்.  அதாவது நமது நாட்டில் முஸ்லிம்கள் எப்படி பயப்படுவார்களோ அதுபோல அவர்கள் நிலை உள்ளது.

மேலும், அவர்கள் வன்முறைக்கும் ஆளாகிறார்கள்.” எனத் தெரிவித்தார்.  “இஸ்ரேலுக்கு எதிராக பேசுவதில் யூதர்கள் குழப்பமடைந்துள்ளனர்.  நான் மதவெறிக்கு எதிரானவள். இஸ்லாமிய எதிர்ப்புக்கு எதிரானவள்” எனத் தெரிவித்தார்.  இந்நிலையில்,  யூதர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக சூசனை படத்திலிருந்து நீக்குவதாக தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இதே போல் மெக்ஸிகோவை சேர்ந்த மெலிசா, ஸ்க்ரீம் 5 மற்றும் 7-ஆம் பாகங்களிலும், ‘இன் தி ஹயிட்ஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர்.

இஸ்ரேல் ஹமாஸ் போர் குறித்து பதிவிட்ட மெலிசா,  இனப்படுகொலை மற்றும் இன அழிப்பை இஸ்ரேல் மேற்கொண்டு வருவதாகவும்,  காஸாவை வதம் செய்யும் முகாம்களாக மாற்றியுள்ளதாகவும் பதிவிட்டிருந்தார்.  மெலிசாவின் பதிவை தொடர்ந்து, அவரை ஸ்க்ரீம் படத்தில் இருந்து நீக்குவதாக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம், “இனப்படுகொலை குறித்து தவறான உதாரணத்தை கூறி, வெறுப்பைத் தூண்டுவதை நாங்கள் சகித்துக் கொள்ளமுடியாது” என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள மெலிசா, “நான் மதவெறி மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பாளர்களை தான் கண்டிக்கிறேன்.  எந்தவொரு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை கண்டிக்கிறேன்.  வன்முறையில் மேலும் மரணம் ஏற்படாமல் அமைதி நிலவ இரவும்,  பகலும் பிரார்த்திக்கிறேன். தேவைப்படுபவர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்.  அமைதி,  பாதுகாப்பு,  சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவேன்.” என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.


source https://news7tamil.live/two-actresses-who-voiced-against-israel-were-fired-by-the-production-company.html