புதன், 22 நவம்பர், 2023

கோவையில் மீண்டும் மாஸ்க்: கலெக்டர் அறிவுறுத்தல்

 

sarae

கோவை மாவட்டத்தில் ஃப்ளு வைரஸ் காய்ச்சல் பரவலாக காணப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார்  தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் பருவ நிலை மாற்றம் காரணமாக ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவலாக  காணப்படுகிறது. குழந்தைகள் மற்றும் முதியோருக்கு இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் எளிதாக ஏற்படக் கூடும்.

 காய்ச்சல், உடல் வலி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, இருமல் ஆகியன இந்த வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளாக காணப்படுகிறது. பொதுவாக இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எழு நாட்களில் குணமடைந்து விடுவர். நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், இருதய நோய், புற்றுநோய் போன்ற இணை நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்துகள் உட்கொள்ள வேண்டும்.

 இக்காலகட்டத்தில் பொது மக்கள் அனைவரும் குடிநீரை நன்றாக கொதிக்க வைத்து பின் ஆறவைத்து குடிக்க வேண்டும். தொண்டையில் கரகரப்பு இருக்கும் பட்சத்தில் சமையல் கல் உப்பை வெந்நீரில் போட்டு, தொண்டையில் படுமாறு வாய் கொப்பளிக்க வேண்டும். இருமும் போதும் தும்மும் போதும் உங்கள் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை அல்லது துணியால் மூடிக் கொள்ள வேண்டும். அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும். வெளியில் செல்லும் போது முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் இருந்து சுமார் 1 மீட்டர் இடைவெளி விட்டு விலகி இருக்க வேண்டும். வீட்டுக்கு வெளியே சென்று வந்தபிறகு கை, கால்களை சோப்பு போட்டு கழுவிய பிறகே, வீட்டுக்குள் நுழைய வேண்டும், வைட்டமின் சி. புரத சத்து மிகுந்த உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். மேற்கண்ட தொடர் செயல்கள் மூலம் வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்கலாம். மேலும், காய்ச்சல் கண்டவர்கள் பதிவுபெற்ற மருத்துவரை நாடி உரிய அறிவுரைக்கு பின் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

 மாவட்டத்தில் காய்ச்சல் பாதித்து உள்நோயாளியாக சிகிச்சை பெறுவோரின் விவரங்களை அரசு, தனியார் மருத்துவமனைகளில் பெற்று அவர்கள் வசிக்கும் பகுதியில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேல் சிகிச்சை தேவைப்பட்டால் மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/kovai-mask-compulsory-collector-order-1704427