வெள்ளி, 17 நவம்பர், 2023

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் – இன்று உருவாகிறது மிதிலி புயல்..!

 17 11 2023

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நவம்பர் 17 ஆம் தேதியான இன்று புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கை அருகே நிலைகொண்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாலும் தமிழ்நாட்டில் நவம்பர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 22ஆம் தேதி வரை 6 நாள்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியுட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது..

” மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நவம்பர் 16 ஆம் தேதி வியாழக்கிழமை  காலை 5.30 மணியளவில் ஆழந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று,  விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 420 கி.மீ. கிழக்கு தென்கிழக்கே நிலைகொண்டுள்ளது.

இது வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து நவம்பர் 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை புயலாக வலுப்பெற்று  நவம்பர் 18 ஆம் தேதி சனிக்கிழமை  அதிகாலை வங்கதேச கடற்கரையையொட்டி நகர்ந்து மோங்லா-கேப்புபாராவு பகுதிகளுக்கு இடையே கடக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.


இந்தப் புயலுக்கு ‘மிதிலி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.  இந்தப் பெயரை மாலத்தீவு பரிந்துரைத்துள்ளது. இதற்கிடையே,  தென்மேற்கு வங்கக் கடல்,  இலங்கையையொட்டி,  வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நவம்பர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 22ஆம் தேதி வரை   பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

குறிப்பாக,  நவம்பர் 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி,  திருநெல்வேலி, தென்காசி,  தூத்துக்குடி,  விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும்,   நவம்பர் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவை மாவட்ட மலைப் பகுதிகள்,  நீலகிரி,  கன்னியாகுமரி, திருநெல்வேலி,  தூத்துக்குடி,  ராமநாதபுரம்,  சிவகங்கை,  புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகர் பகுதிகளில் நவம்பர் 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில பகுதிகளில் இடி,  மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி 80,  கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகம் 70,  தக்கலை 60,  திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி 50. மி.மீ. மழை பதிவானது.

 வடமேற்கு,  வடகிழக்கு வங்கக் கடல்,  மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில்   நவம்பர் 17 ஆம் தேதி  வெள்ளிக்கிழமை சூறாவளிக் காற்று மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மேலும், மத்திய வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://news7tamil.live/a-deep-low-pressure-zone-prevailed-in-the-bay-of-bengal-mithili-storm-is-forming-today.html

Related Posts: