மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் முதல் வேலையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் வரும் 25ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரஸும், ஆட்சியைப் பிடிக்க பாஜகவும் கடுமையாக போட்டியிட்டு வருகின்றன.
இந்நிலையில் புந்தி, தௌசா ஆகிய பகுதிகளில் காங்கிரஸுக்கு ஆதரவாக காங். எம்.பி ராகுல் காந்தி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
‘பாரத் மாதா கீ ஜே’- விற்கு பதிலாக ‘அதானி கீ ஜே’ என்று தான் பிரதமர் மோடி முழங்க வேண்டும். ஏனென்றால் மோடி அதானிக்காகவே 24 மணி நேரமும் உழைக்கிறார். ஏழை மக்களுக்காக ஒரு நாடு, அதானிக்காக ஒரு நாடு என இரண்டு மாதிரியான இந்தியாவை உருவாக்கவே பிரதமர் விரும்புகிறார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், ஆட்சி அமைத்த உடனேயே முதல் வேலையாக இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்படும். ராஜஸ்தானில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் (ஓபிசி) எண்ணிக்கை குறித்து நான் கேள்வியெழுப்பினால், பிரதமர் மோடி வேறு விஷயங்களைப் பேசி திசை திருப்பி விடுகிறார்.
ஓபிசி, தலித், பழங்குடியின இளைஞர்கள், த ங்களின் உண்மையான எண்ணிக்கையை அறிந்து கொள்ள விரும்பினால், சாதியே இல்லை என மோடி கூறுகிறார். பாரத ஒற்றுமை நடைபயணத்தின் போது, இந்தியா முழுவதும் ஓபிசி, தலித் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் பலருக்கு ஐஏஎஸ் ஆக வேண்டுமென்ற கனவுகள் இருப்பதை அறிந்து கொண்டேன்.
90 ஐஏஎஸ் அதிகாரிகளின் மூலம் நாட்டை நிர்வகிக்கிறார் பிரதமர் மோடி. அவர்களில் 3 பேர் மட்டுமே ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள். நாட்டில் சுமார் 50% அளவுக்கு உள்ள ஓபிசி பிரிவினரின் பிரதிநிதித்துவம் 3 அதிகாரிகள்தான். எனவே, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது நாட்டுக்கு மிகவும் அவசியம்”.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
source https://news7tamil.live/if-the-congress-forms-the-government-the-first-task-will-be-to-conduct-a-caste-wise-census-rahul-gandhi-mp.html