Madhya-pradesh | priyanka-gandhi | congress | bjp: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நவம்பர் 7ம் தேதி தொடங்கி வருகிற 30ம் தேதி வரை நடக்கிறது. இவற்றில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் நாளை (நவம்பர் 17) முதல் தொடங்க உள்ளது.
இந்த நிலையில், மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் '21' என்ற எண் மீண்டும் மீண்டும் இடம்பெற்று வருவதை காண முடிகிறது. சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான தற்போதைய பா.ஜ.க அரசாங்கம் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையிலான அரசு வேலைகளை மட்டுமே வழங்கியதாக காங்கிரஸ் தனது தேர்தல் பிரச்சாரத்தில் குற்றம் சாட்டி வருகிறது.
கடந்த ஜூன் 12 ஆம் தேதி எம்.பி தேர்தலுக்கான காங்கிரஸ் பிரச்சாரத்தை தொடங்கிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இந்த குற்றச்சாட்டை முதலில் தெரிவித்து இருந்தார். தற்போது மீண்டும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போதும் அவர் இந்த குற்றச்சாட்டை மீண்டும் கூறியுள்ளார்.
நேற்று புதன்கிழமை, வாக்குப்பதிவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, பிரியங்கா, டாடியாவில் நடந்த பேரணியில் மீண்டும் அந்த குற்றச்சாட்டைக் குறிப்பிட்டு பேசினார். “பா.ஜ.க தலைவர்கள் மத்திய பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான வெற்று அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். அது அவர்களுக்கு இப்போது நினைவில் இல்லை. மத்தியப் பிரதேசத்தின் பா.ஜ.க அரசு கடந்த 3 ஆண்டுகளில் 21 பேருக்கு மட்டுமே வேலை வழங்கியுள்ளது. அதேசமயம் சத்தீஸ்கரில் மிகக் குறைந்த வேலைவாய்ப்பின்மை உள்ளது,” என்று கூறினார்.
பா.ஜ.க பதில்
பிரியங்காவின் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ள பா.ஜ.க அரசு புள்ளிவிவரங்கள் "கடந்த மூன்று ஆண்டுகளில் 61,000 அரசாங்க வேலைகளை வழங்கியுள்ளன" என்றும், அவரது தரவுகள் அனைத்தும் தவறானவை என்றும், ஒப்பந்த ஊழியர்களை கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.
முன்னதாக, பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ஹிதேஷ் பாஜ்பாய் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், “38,000 ஆசிரியர் வேலைகள் மட்டும் வழங்கப்பட்டுள்ளன. இதனால் பிரியங்காவுக்கு அவரது தரவு எங்கிருந்து கிடைத்தது என்பது ஆவலாக உள்ளது. அவர் கூறும் அனைத்து புள்ளிவிவரங்களும் போலியானவை. இந்த புள்ளிவிவரங்கள் அவரது பிரபலத்தை மட்டுமே கெடுக்கும். அடுத்த முறை அவர் தனது புள்ளிவிவரங்களில் வேலை செய்ய வேண்டும்." என்று கூறினார்.
பிரியங்காவின் புள்ளிவிவரம்
இந்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய பிரதேசம் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் யசோதர ராஜே சிந்தியா சட்டசபையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இருந்து பிரியங்கா மேற்கோள் காட்டி இருந்தார்.
சட்டசபை கூட்டத்தொடரின் போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ மேவரம் ஜாதவ், மாநிலத்தில் வேலையில்லா திண்டாட்டம் உட்பட பா.ஜ.க மூத்த அமைச்சர்களிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பினார். இது தொடர்பாக அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், “அரசுப் பதவிகளில் எத்தனை பேருக்கு வேலை வழங்கப்பட்டது என்ற விவரங்களை அளிக்குமாறு அரசிடம் கேட்டேன். இந்த மாநிலத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. அவர்கள் பெரிய கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள். அதை பேப்பரில் வெளியிடச் சொன்னேன். அவர்கள் கூறியது எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது." என்று கூறினார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ மேவரம் ஜாதவ் கேள்விக்கு மார்ச் 1 அன்று அமைச்சர் யசோதர ராஜே சிந்தியா எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருந்தார். அதில், ஏப்ரல் 1, 2020 முதல், “21 விண்ணப்பதாரர்களுக்கு அரசு மற்றும் பாதி அரசு அலுவலகங்களில் வேலை வழங்கப்பட்டது. இது தவிர, தனியார் துறை முதலாளிகளால் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 2,51,577 விண்ணப்பதாரர்களுக்கு வேலைக்கு சேருவதற்கான கடிதங்கள் வழங்கப்பட்டன.
39,93,149 பேர் (37,80,679 படித்தவர்கள் மற்றும் 1,12,470 படிக்காதவர்கள்) மாநிலத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தங்களைப் பதிவு செய்துள்ளனர். மேலும் 2021-22 நிதியாண்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களை இயக்க ரூ.1,674.73 லட்சம் செலவிடப்பட்டுள்ளது" என்று அவர் பதிலளித்தார்.
காங்கிரஸ் தவறான புள்ளி விவரங்களை கூறியதாக தெரிவித்துள்ள பா.ஜ.க, “இது (21) மாநிலத்தின் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்யப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை, அரசுத் துறைகளில் வேலை பெற்றவர்களின் எண்ணிக்கை. ஆனால் மாநிலத்தில் உள்ள மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை மொத்தம் 61,000 ஆக உள்ளது." என்று கூறியது.
source https://tamil.indianexpress.com/india/priyanka-gandhi-madhya-pradesh-assembly-poll-campaign-shivraj-singh-chouhan-govt-21-jobs-salvos-tamil-news-1697500