புதன், 15 நவம்பர், 2023

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு: ம.ம.க ஜவாஹிருல்லாஹ்

 MMK.jpg

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டம் கோவை குனியமுத்தூரில் நேற்று (நவ.14) நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லாஹ் கூறியதாவது, "அனைத்து மத வழிபாட்டு தளங்களையும் பாதுகாக்க வலியுறுத்தி, டிசம்பர் 6-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தோழமைக் கட்சிகள், அமைப்புகள் ஆதரவுடன் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.  2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் மத்திய அரசின் திசையை மாற்றும் தேர்தலாக இருக்கும்.

இந்தியா கூட்டணி ஏற்கனவே 3 முறை ஒன்று கூடி ஆலோசித்துள்ளது. இந்தியா கூட்டணியை வலுப்படுத்த காங்கிரஸ், பிற கட்சிகளையும் கூட்டணியில் இணைக்க முழு முயற்சி எடுக்க வேண்டும்

வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். பாஜகவில் இருந்து அதிமுக வெளியேறி விட்டதாக காட்சிகள் அரங்கேற்றப்படுகிறது.

இதுவரை மத்திய அரசுக்கு எதிரான எந்த கருத்தையும் எடப்பாடி பழனிச்சாமி முன் வைக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தாங்கள் ஆதரிப்பதாகவும்,  தேர்தலில் போட்டியிட தங்களுக்கு ஒரு தொகுதியை திமுக ஒதுக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார். 

நீண்ட காலமாக சிறையில் இருக்கும்  சிறைவாசிகள் 20 பேரை நீண்ட விடுப்பில் விடுதலை செய்ய தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளது.  ஆனால் ஆளுநர் அந்த கோப்புகளை கிடப்பில் போட்டுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டு வரும் சட்டத்தை நிறைவேற்றாமல் கிடப்பில் போடும் ஆளுநரால், ஒரு பேரூராட்சி தேர்தலில் ஆவது நின்று வெற்றி பெற இயலுமா எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, நீட் தேர்வு விவகாரத்தில் மாநில அரசின் உரிமையை மத்திய அரசு பறிப்பதாக குற்றம்சாட்டிய அவர்,  தமிழக மக்களின் வரிப் பணத்தில் கட்டப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் யார் படிக்க வேண்டும் என்பதை தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் நீட் தேர்வின் நிலை குறித்து பொது மக்கள் மற்றும் மாணவர்களிடம் கொண்டு செல்லும் பணியை செய்து வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

செய்தி: பி. ரஹ்மான் 


source https://tamil.indianexpress.com/tamilnadu/mmk-ready-to-ally-with-dmk-says-jawahirullah-1696320