புதன், 29 நவம்பர், 2023

கோயிலுக்கு சென்ற முஸ்லிம் எம்எல்ஏ – கங்கை ஆற்று நீரை தெளித்து சுத்தப்படுத்திய கோவில் நிர்வாகம்..!

 

இஸ்லாமிய சட்டமன்ற உறுப்பினர் கோயிலுக்கு சென்றதால் கங்கை ஆற்று நீரை தெளித்து கோவில் நிர்வாகம் சுத்தப்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநில சித்தார்த் நகரில் இஸ்லாமிய சட்டமன்ற உறுப்பினர் வந்து சென்றதால், கோயிலை கங்கை ஆற்று நீர் தெளித்து புனிதப்படுத்தியதாக இந்து அமைப்பு நிர்வாகிகளும் குடிமை அமைப்பு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

கோயிலில் நடக்கும் பூஜை ஒன்றிற்காக அப்பகுதி மக்களின் அழைப்பின் பேரில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சயீதா கஹூன்  கோயிலுக்கு சென்றுள்ளார். அடுத்த நாள் அந்தப் பகுதியின் ஊராட்சி மன்ற தலைவர் தர்மராஜ் வெர்மா தலைமையில் கோயிலை கங்கை ஆற்று நீர் தெளித்து சுத்தப்படுத்தியுள்ளனர்.

மாட்டு இறைச்சி உண்ணக்கூடிய சட்டமன்ற உறுப்பினர் வந்து சென்றதால் இந்தக் கோயிலின் புனிதம் கெட்டுவிட்டது. அதனால் கோயிலை மீண்டும் புனிதப்படுத்தும் பணி நடத்தப்பட்டது. இப்போது கோயில் மீண்டும் புனிதமடைந்து கடவுளை வணங்க ஏற்ற இடமாக உள்ளது என தர்மராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த விசயம் ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியது. இதனைத் தொடர்ந்து பேசிய  சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சயீதா கஹூன்  தெரிவித்ததாவது..

பல பிராமணர்களும் அர்ச்சகரும் என்னை அந்த பூஜைக்காக அழைத்தார்கள். நான் எல்லா மதங்களையும் மதிக்கும் நபர். நான் எல்லோருக்குமான சட்டமன்ற உறுப்பினர். என்னை அழைக்கும் அனைத்து இடங்களுக்கும் நான் செல்வேன் எனக்கூறியுள்ளார். மேலும், சயீதா கஹூன் அந்தப் பகுதியில் உள்ள பல கோயில்களை புதுப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


source https://news7tamil.live/the-muslim-mla-who-went-to-the-temple-the-temple-administration-cleaned-it-by-sprinkling-ganga-river-water.html