udhayanidhi-stalin | சேலம் மாவட்டத்தில் டிச.17ஆம் தேதி திமுக இளைஞரணி மாநாடு நடக்கிறது. இந்த நிலையில் தமிழக விளையாட்டு துறை அமைச்சரும், திமுகவின் இளைஞர் அணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் . கன்னியாகுமரி முக்கடல் சங்கம பகுதியில் இருந்து இருசக்கர வாகன பேரணியை தொடங்கிவைத்தார்.
இந்தப் பேரணி கன்னியாகுமரி, ஈரோடு, திருவாரூர் மற்றும் காஞ்சிபுரம் என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அப்போது விழாவில் பேசிய உதயநிதி, “இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் நீங்கள் அனைவரும் கவனமாக பயணித்து அடுத்த மாதம் 17ஆம் தேதி சேலம் மாநாட்டு திடலுக்கு 13 நாள்களில், 188 இருசக்கர வாகனங்களில், 504 பிரச்சார மையங்களில் பிரச்சாரம் செய்து 234 சட்ட மன்ற தொகுதிகளை கடந்து வர வேண்டும்.
அப்போது கழகத் தலைவரும், நானும் உங்களை வரவேற்க காத்திருப்போம்” என்றார். தொடர்ந்து பல கட்ட போராட்டங்கள் நடத்திய பின்னரும் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்யவில்லை என விமர்சித்த உதயநிதி, “தமிழக அரசு ஒன்றிய அரசுக்கு இதுவரை அளித்துள்ள வரி ரூ.25,000 கோடி.ஆனால் மத்திய அரசு திருப்பி அளித்த தொகை வெறும் ரூ.2000 கோடிதான்” என்றார்.
தொடர்ந்து ஒரு குட்டி கதை சொல்லத் தொடங்கிய உதயநிதி, “உங்களுகெல்லாம் ஒரு குட்டி கதை சொல்லுகிறேன். பூட்டப்பட்டிருந்த ஒரு பூட்டை கனமான சுத்தியலால் பல முறை ஓங்கி ஓங்கி அடித்தும் பூட்டை திறக்க முடியவில்லை.
பூட்டை சாவிகொண்டு எளிதாக திறக்க முடிந்தது. கனமான சுத்தியலால் திறக்க முடியாத பூட்டை ஒரு சின்ன சாவியால் திறக்க முடிந்தது.
சாவியை பார்த்து சுத்தியல் கேட்டதாம்? எப்படி இவ்வளவு சாதுரியமாக திறந்தாய்? என்று. அதற்கு சாவி சொன்னதாம், ஆணவத்தால் தலையில் அடித்தால் பூட்டு திறக்காது. பூட்டின் இதயத்தை சாவியால் தொட்டால் போதும் பூட்டு திறந்து விடும்.
அந்த பூட்டு தான் தமிழகம்.சாவிதான் திமுக, அந்த தலைக்கனம் பிடித்த சுத்தியலால் தான் ஒன்றிய அரசு.பாஜகவால் தமிழகத்தில் என்றுமே கால் பதிக்க முடியாது” என்றார்.
செய்தியாளர் த.இ. தாகூர்
source https://tamil.indianexpress.com/tamilnadu/udhayanidhi-stalin-held-a-bike-rally-in-kanyakumari-1697350