22 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் 8 நிறுவனங்களுக்கு தொகுப்பு சதவீத சலுகை வழங்க தமிழ்நாடு அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசித்ததாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், அமைச்சரவை கூட்டம் முடிந்தபின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் முன்னேறியுள்ளது. புதிய தொழில் நிறுவனங்களுக்கான தொகுப்பு சதவீத சலுகை வழங்குவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தொழில் வளர்ச்சிக்கு சிறந்த துறைமுக கட்டமைப்பு அவசியம் என்பதால், தமிழ்நாடு மாநில துறைமுக மேம்பாட்டு கொள்கை வடிவமைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 8 நிறுவனங்களுக்கு தொகுப்பு சதவீத சலுகை வழங்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி,கோவை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ரூ.7 ஆயிரம் கோடி முதலீட்டின் மூலம் 22,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விண்வெளி ஆராய்ச்சி, மின் வாகனம் உள்ளிட்ட தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வரவுள்ளது. திருச்சி, சேலம் மாவட்டங்களில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு நிலம் வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. ” இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சரவைக்கூட்டம் குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில், சக அமைச்சர்களுடன் தலைமைச் செயலகத்தில் இன்று கலந்து கொண்டோம். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்கிற வகையில் ரூ.7,108 கோடி மதிப்பில் மேலும் 22 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முன்வந்துள்ள 8 நிறுவனங்களுக்கு தொகுப்பு சதவீத சலுகை வழங்கவும், தமிழ்நாடு மாநில துறைமுக மேம்பாட்டுக் கொள்கை – 2023-க்கும் இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும், ஒவ்வொரு துறையிலும் அமைச்சர்கள் வெளியிட்ட அறிவிப்புகள், அவற்றின் தற்போதைய நிலை – மக்கள் நலன் சார்ந்து மேற்கொள்ளப்படவுள்ள புதிய திட்டங்கள் – மழைக்கால முன்னேற்பாட்டு பணிகள் உள்ளிட்டவை குறித்து நம் முதலமைச்சர் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.
source https://news7tamil.live/job-opportunities-for-22-thousand-people-important-decision-in-the-tamil-nadu-cabinet.html