source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-press-club-condemns-sve-shekher-for-defamatory-comment-on-female-journalists-tamil-news-8914440
/indian-express-tamil/media/media_files/2025/04/01/5vk2c6iAtoGi0rM5DlXG.jpg)
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து மீண்டும் அவதூறான கருத்தை தெரிவித்துள்ள எஸ்.வி.சேகருக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து மீண்டும் அவதூறான கருத்தை தெரிவித்துள்ள எஸ்.வி.சேகருக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் தலைவர் ம. சுரேஷ் வேதநாயகம் மற்றும் பொதுச்செயலாளர் மு.அசீப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெண் பத்திரிகையாளர்களை மீண்டும் இழிவுபடுத்தியுள்ள எஸ்.வி.சேகரை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்களை மிகவும் கீழ்த்தரமாக சித்தரிக்கும் பதிவு ஒன்றை நடிகர் எஸ்.வி.சேகர் தன்னுடைய முகநூலில் மறுபதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு பத்திரிகையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பத்திரிகையாளகர்ளும் பத்திரிகையாளர் அமைப்புகளும் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். எஸ்.வி.சேகரை கண்டித்து ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
1 4 25
பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் செயல்பட்ட எஸ்.வி.சேகர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை மற்றும அபராதம் விதித்தது. இதை எதிர்த்து எஸ்.வி.சேகர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தற்போது, நிவாரணம் கோரி உச்சநீதிமன்றத்தை எஸ்.வி.சேகர் நாடியுள்ளார்.
இந்தநிலையில், எஸ்.வி.சேகர் சமீபத்தில் நடத்தியுள்ள நாடகத்தில், பெண் பத்திரிகையாளர்களை மோசமாக சித்தரிக்கும் வகையிலும், அவர்களை பாலியல்ரீதியாக இழிவுபடுத்தும் வகையிலும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்தமுறை பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்டதற்கு, பத்திரிகையாளர்கள் மத்தியிலும், நீதிமன்றத்திலும் மன்னிப்பு கேட்ட எஸ்.வி.சேகர் தற்போத அதே தவறை மீண்டும் செய்துள்ளார். இதன்மூலம், தான் செய்த தவறை எஸ்.வி.சேகர் உணரவில்லை என்பது உறுதியாகிறது. மேலும், தான் செய்வது என்வென்பதை அறிந்தே அவர் செய்துள்ளார் என்பதும் தெளிவாகிறது.
ஆகவே, பெண் பத்திரிகையாளர்களை மீண்டும் கீழ்த்தரமாக பேசியுள்ள எஸ்.வி.சேகரை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
எஸ்.வி.சேகர் நடத்திய நாடகத்தில் பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிராக இடம்பெற்று காட்சி தொடர்பாக எஸ்.வி.சேகர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
அதேபோல், உச்சநீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறை சார்பாக மனுதாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.