எழுத்தாளர் டாக்டர் ரவிக்குமார் எம்.பி
8 4 2025
நீட் விலக்கு மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிய பிரச்னை மாநில உரிமைகள் தொடர்பான விவாதத்தைத் தீவிரப்படுத்தி இருக்கிறது.
மாநிலங்கள் சட்டம் இயற்றுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரம், அதில் செய்யப்படவேண்டிய திருத்தம் ஆகியவை குறித்து இந்த நேரத்தில் நாம் கவனம் செலுத்தியாக வேண்டும். இது தொடர்பாக டாக்டர் கலைஞர் அவர்களால் அமைக்கப்பட்ட பி.வி.ராஜமன்னார் (1901–1979) குழு என்ன கூறியிருக்கிறது என்று ஆராய்வது அவசியம்.
1969 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ராஜமன்னார் குழு 1971 மே மாதத்தில் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் அரசமைப்புச் சட்டத்திருத்தம் என்ற ஒரு அத்தியாயம் இடம்பெற்றுள்ளது ( அத்தியாயம் XX ) அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கு மாநிலங்களின் ஒப்புதல் அவசியம் கட்டாயம் என ஆக்கப்பட வேண்டும் என்பதை ராஜமன்னார் குழு வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவில் நான்கில் மூன்று பங்கு மாநிலங்களின் ஒப்புதல் இருந்தால்தான் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வரும். அதுபோன்ற ஒரு ஏற்பாடு தற்போது அவசியம். இல்லாவிட்டால் ஒரு மாநிலத்திற்கு ஊறு விளைவிக்கின்ற சட்டத்திருத்தத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றி விட முடியும் என்று அப்போதே சுட்டிக்காட்டப் பட்டிருக்கிறது.
ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளும் எந்த ஒரு அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தத்துக்கும் நான்கில் மூன்று பங்கு மாநிலங்களின் ஒப்புதல் அல்லது மூன்றில் இரண்டு பங்கு மாநிலங்களின் ஒப்புதல் இருந்தாக வேண்டும் என்று சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும் என ராஜமன்னார் குழு வலியுறுத்தியுள்ளது
நீட் பிரச்சினையைப் பொறுத்தமட்டில் தமிழ்நாடு தவிர வேறு எந்த மாநிலமும் இதைக் கடுமையாக எதிர்க்கவில்லை. எனவே நான்கில் மூன்று பங்கு மாநிலங்களின் ஒப்புதல் இருக்க வேண்டும் என்ற பாதுகாப்புக் கூறும்கூட இது போன்ற பிரச்சினைக்குத் தீர்வாக அமைய முடியாது. எனவேதான் ராஜமன்னார் குழு ஒத்திசைவுப் பட்டியலில் ஒன்றிய அரசு ஒரு சட்டத்தை இயற்றினால் அதில் திருத்தம் கொண்டு வரவும், அதை ரத்து செய்யவும் மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது. குறிப்பாக உறுப்பு 252 இன் கீழ் நாடாளுமன்றம் நிறைவேற்றும் ஒரு சட்டத்தைத் திருத்தவோ, ரத்துசெய்யவோ மாநில சட்டமன்றங்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும் என ராஜமன்னார் குழு பரிந்துரைத்துள்ளது. அவ்வாறு இருந்தால்தான் ஒரு மாநிலத்துக்கு ஊறு செய்யும் சட்டத்தை ஒன்றிய
அரசு இயற்ற முடியாது.
கல்வி குறித்த அதிகாரம் மாநிலப் பட்டியலில்தான் இருந்தது என்பதும் அவசரநிலைக் காலத்தின் போதுதான் அது ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது என்பதும் நமக்கெல்லாம் தெரியும். இந்த அதிகாரத்தை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றவேண்டும் எனத் தொடர்ந்து தமிழ்நாடு மட்டுமே குரல் கொடுத்து வருகிறது. இதற்கான ஆதரவை நாம் திரட்ட வேண்டும். ராஜமன்னார் குழு ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள பல பிரிவுகளை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் எனவும்; ஒத்திசைவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள அதிகாரம் தொடர்பான மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்வதற்கு முன்பு மாநிலங்களைக் கலந்தாலோசிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருக்கிறது.
மாநிலங்கள் மற்றும் மாநில அதிகாரிகளுக்கு மத்திய அரசு குறிப்பிட்ட சில அதிகாரங்களை அளித்து செயல்படுத்தப் பணிக்கும் விதமாக சட்டங்களை இயற்றுவதற்கு அதிகாரமளிக்கும் அரசியலமைப்பு சட்டப் பிரிவுகள் 154, 258 ஆகியவை நீக்கப்படவேண்டும்.அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள இதர அதிகாரங்கள் ( Residuary Powers ) யாவும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படவேண்டும்
மாநிலங்களுக்கு சிலவற்றைச் செய்யுமாறு ஆணை பிறப்பிக்க அதிகாரமளிக்கும் பிரிவுகள் 256, 257, 339(2), 344 (6) ஆகியவை நீக்கப்படவேண்டும்.
ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளவை தொடர்பாக மாநில அரசு இயற்றும் சட்டமே செல்லுபடியாகும் என ஆக்கப்படவேண்டும். அதற்கேற்ப பிரிவு 254 திருத்தப்படவேண்டும். மாநில அரசு அவசர சட்டம் இயற்றுவதற்கு முன்பு குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெறவேண்டும் என்ற பிரிவு 213 (1) நீக்கப்படவேண்டும். மாநிலப் பட்டியலில் உள்ள அதிகாரம் தொடர்பாக நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வகை செய்யும் பிரிவு 249 நீக்கப்படவேண்டும்.
சட்ட மேலவையை உருவாக்கவும், கலைக்கவும் மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கவேண்டும். அதற்கு பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்ற சட்டப் பிரிவு 169 திருத்தப்படவேண்டும். மாநிலங்களில் மத்திய படைகளை ஈடுபடுத்த வகைசெய்யும் பிரிவு 257 ஏ நீக்கப்படவேண்டும்” என ராஜமன்னார் குழு பரிந்துரைத்துள்ளது.
நீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்டது தொடர்பாக சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள கட்சித் தலைவர்களின் பேரவையின் சிறப்புக் கூட்டம் நாளை (ஏப்ரல் 9) கூட்டப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார். அந்தக் கூட்டத்தில் நீட் தொடர்பாக சட்டம் இயற்றி ஆளுநருக்கு அனுப்புவது என முடிவெடுக்கப்படலாம். ஆளுநர் அதிகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு இதில் உதவுமா என்பதை ஆராய வேண்டும். அத்துடன் இத்தகைய சட்டங்களை இயற்றுவது தொடர்பாக ராஜமன்னார் குழு முன்வைத்திருக்கும் பரிந்துரைகளைப் பற்றிய விவாதத்தைத் துவக்குவதற்கு இது உகந்த தருணம் ஆகும். இதைத் தமிழ்நாடு அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்த கட்டுரையை எழுத்தாளர் டாக்டர் ரவிக்குமார், வி.சி.க எம்.பி தனது எக்ஸ் பக்கத்தில் எழுதியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/opinion/vck-mp-dr-ravikumar-writes-neet-exemption-bill-rejected-some-thoughts-for-consideration-by-the-all-party-meeting-8939692