/indian-express-tamil/media/media_files/2026/09/19/wild-dog-2026-09-19-19-58-05.jpg)
ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள சாம்பியா நாட்டில், மிக நீண்ட தூரம் பயணம் செய்து புதிய உலக சாதனையைப் படைத்துள்ளன மூன்று அழிந்துவரும் ஆப்பிரிக்கக் காட்டு நாய்ச் சகோதரர்கள். தங்கள் புதிய வாழ்விடத்தைத் தேடிப் புறப்பட்ட இந்த சகோதரர்கள், எட்டு மாத காலத்தில் சுமார் 4,126 கிலோமீட்டர் தொலைவைக் கடந்து, ஆப்பிரிக்க பாலூட்டிகளின் மிக நீண்ட ஒற்றைப் பயணப் பதிவை எட்டியுள்ளனர்.
மேற்கு சாம்பியாவில் அமைந்திருக்கும் 'கஃபுவே' (Kafue) தேசியப் பூங்காவில் 'மாயுகுயுகு' என்ற காட்டு நாய் கூட்டத்தில் வளர்ந்த இந்த மூன்று சகோதரர்களும், சுமார் 3 வயதை எட்டியபோது தங்கள் தாய் கூட்டத்திலிருந்து பிரியத் தொடங்கினர். காட்டு நாய்களின் இயற்கை இயல்பின்படி, பாலின முதிர்ச்சி அடையும் இளம் விலங்குகள் புதிய இணையைத் தேடவும், சொந்தமாக ஒரு எல்லைப் பகுதியை உருவாக்கவும் தங்கள் சொந்தக் கூட்டத்திலிருந்து வெளியேறுவது வழக்கம். அந்த வகையிலேயே 2025-ஆம் ஆண்டில் இவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் தொடங்கியது.
மனித நடமாட்டம் நிறைந்த பகுதிகள், பெரு நகரங்களான கப்வே, கிட்வே, என்டோலா போன்றவற்றின் சுற்றுப்புறங்கள், பெரிய நீர்த்தேக்கங்கள் மற்றும் அடர்ந்த காட்டுப் பாதைகள் எனக் பல கடுமையான சவால்களைத் தாண்டி இவர்கள் கிழக்கே நோக்கிய Luangwa பள்ளத்தாக்கை நோக்கி முன்னேறினர். வழியில் தடங்கல்கள் மற்றும் ஆபத்துகளைச் சந்தித்தபோது, வந்த பாதையிலேயே சில கிலோமீட்டர்கள் பின்வாங்கி, மாற்றுப் பாதைகளைக் கண்டறிந்து பயணித்தனர்.
இந்தப் பயணத்தின் போது, 2025 நவம்பர் மாதத்தில், மற்றொரு பகுதியிலிருந்து பிரிந்து வந்த நான்கு பெண் காட்டு நாய்களை இவர்கள் நெருங்கினர். இரு குழுக்களும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் கடந்து வந்திருந்த போதிலும், அவை ஒன்றிணையவில்லை. இறுதியாக, 2026 ஏப்ரல் 1-ஆம் தேதிக்குள் 4,126 கிலோமீட்டர்களைக் கடந்த இந்த மூன்று சகோதரர்களும், Luano வனப் பகுதியில் தங்களுக்குப் பொருத்தமான புதிய வாழ்விடத்தை அமைத்துக் கொண்டன. இவை புறப்பட்ட இடத்திற்கும் தற்போதைய இடத்திற்கும் இடையிலான நேர்க்கோட்டுத் தொலைவு குறைவாக இருந்தாலும், வழியில் சந்தித்த தடைகளைத் தவிர்க்க இவை சுற்றிச் சுழன்று பயணித்ததால் இவ்வளவு பெரிய தூரம் பதிவாகியுள்ளது.
இந்தப் பயணம் வெறுமனே ஒரு சாதனை மட்டுமல்லாமல், வனவிலங்கு பாதுகாப்புத் துறைக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது. 'சாம்பியன் கார்னிவோர் புரோகிராம்' (Zambian Carnivore Programme) அமைப்பு நடத்திய ஆய்வின் ஒரு பகுதியாகவே இந்தச் சகோதரர்கள் கண்காணிக்கப்பட்டனர். மனிதர்களின் நகர விரிவாக்கம், சாலைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு மத்தியிலும், பல்வேறு வனப்பகுதிகளை இணைக்கும் இயற்கை பாதைகள் (Wildlife Corridors) இன்னும் பயன்பாட்டில் இருப்பதை இந்த சம்பவம் நிரூபித்துள்ளது.
இருப்பினும், இந்த நீண்ட பயணம் மிகப்பெரிய ஆபத்துகள் நிறைந்ததாகவே உள்ளது. குறிப்பாக இறைச்சிக்காக மனிதர்கள் வைக்கும் கம்பி வலைப் பொறிகள் இந்த நாய்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகின்றன. இந்த ஆய்வின் போது கண்காணிக்கப்பட்ட மற்றொரு பெண் நாய், இத்தகைய பொறியில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த நாய்களின் மூன்று சகோதரிகளும் இதேபோன்று பயணம் மேற்கொண்டபோது, அதில் இரண்டு சகோதரிகள் கம்பி வலைப் பொறிகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சாம்பியாவின் 40 சதவீத நிலப்பரப்பு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக இருந்தாலும், அவை முழுமையான பாதுகாப்புடன் செயல்படுவதில்லை. எனவே, தேசியப் பூங்காக்களை மட்டும் பாதுகாப்பது போதாது என்றும், விலங்குகள் சுதந்திரமாக ஒரு காட்டுப் பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல உதவும் இணைப்புப் பாதைகளையும் பாதுகாக்க வேண்டியது மிக அவசியம் என்றும் வனவிலங்கு ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், மோன்டனா ஸ்டேட் பல்கலைக்கழகம் மற்றும் சாம்பியா வனவிலங்கு பாதுகாப்புத் துறை ஆகியவை இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள் ஈகாலஜி என்ற அறிவியல் இதழில் செப்டம்பர் 2026-இல் வெளியிடப்பட்டுள்ளன. ஆப்பிரிக்காவில் தற்போது வெறும் 6,600 முதிர்ந்த காட்டு நாய்களே எஞ்சியுள்ள நிலையில், இந்த மூன்று சகோதரர்களின் பயணம் மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான நிலப்பரப்புப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உலகிற்கு உரக்கச் சொல்லியிருக்கிறது.
source https://tamil.indianexpress.com/science/african-wild-dog-brothers-longest-mammal-journey-zambia-12553008





