அவசரநிலை (எமர்ஜென்சி) காலத்தில் தற்போதைய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் அரசியல் கைதியாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பதை 1978-ம் ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்ற மற்றும் அப்போதைய சட்டமேலவை விவாத வரலாற்றுப் பதிவுகள் திட்டவட்டமாக உறுதிப்படுத்துகின்றன என்று 'தி இந்து' நாளிதழ் விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளது.
1976 பிப்ரவரி முதல் 1977 பிப்ரவரி வரை சென்னை மத்திய சிறையில் மிசா கைதிகள் தாக்கப்பட்டதாகவும், மோசமாக நடத்தப்பட்டதாகவும் எழுந்த புகார்களை விசாரிக்க, 1977 மே மாதத்தில் அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம். இஸ்மாயில் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அப்போதைய கருணாநிதி அரசு கலைக்கப்பட்ட பிறகு, சென்னை மத்திய சிறையில் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ஆற்காடு என்.வீராசாமி, முரசொலி மாறன் மற்றும் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டிபாபு உள்ளிட்ட 88 பேர் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டனர். இவர்கள் சிறைக்குள் நுழைந்தவுடனேயே கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
நீதிபதி இஸ்மாயில் ஆணையம் தனது அறிக்கையை 1977 செப்டம்பரில் தாக்கல் செய்தது. இதன்பின், 1978 மார்ச் 31-ல் சட்ட மேலவையில் அமைச்சர் சி.அரங்கநாயகம் இதுதொடர்பான தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அப்போது பேசிய ஆற்காடு வீராசாமி, சிறைக்குள் மிசா கைதிகள் மீதான தாக்குதல்களை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விரிவாக விவரித்தார்.
தொடர்ந்து, 1978 ஏப்ரல் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் சட்டமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. ஏப்ரல் 7-ம் தேதி பேசிய அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு. கருணாநிதி, தனது 15 பக்க தட்டச்சு செய்யப்பட்ட உரையில், கைதிகள் சந்திப்பு மறுக்கப்பட்டது மற்றும் சிறைக் கொடுமைகள் குறித்துப் பேசினார். கைதிகள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து 1976 பிப்ரவரி 26-ல் அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்குக் கருணாநிதி அனுப்பிய தந்தி மற்றும் குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டினார். அதில், கொடூரக் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடவும் அரசியல் கைதிகள் மோசமாக நடத்தப்படுவதாகக் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், காவல்துறை தலைவர் எஃப்.வி. அருளிடம் 24 மணி நேரக் கெடு விதித்துத் தான் போராட்டம் அறிவித்த பிறகே, குடும்பத்தினர் கைதிகளைச் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டதையும் நினைவு கூர்ந்தார்.
மேலும், மு.க.ஸ்டாலினைப் பாதுகாக்கும் முயற்சியில் சிறையில் படுகாயமடைந்து, பின்னர் உயிரிழந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டிபாபுவின் சிறைக் குறிப்பேட்டின் முக்கியப் பகுதிகளைச் சட்டமன்றப் பதிவேட்டில் கருணாநிதி இடம்பெறச் செய்தார். சிட்டிபாபுவின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற சி.பி.எம் உறுப்பினர் கோவிந்தராசனின் கோரிக்கைக்குப் பதிலளித்த கருணாநிதி, "அந்த மாபெரும் வீரனின் நாட்குறிப்பு இந்தப் பேரவையின் பதிவேட்டில் இடம்பெறுவதே அவருக்குச் செய்யப்படும் மிகப்பெரிய கௌரவம்" எனக் கூறி, அதிலிருந்த முக்கியக் குறிப்புகளை வாசித்தார். அதில், சிறை அறையில் கீழே விழுந்து கிடந்த மு.க.ஸ்டாலினின் முகத்தில் சுருளிராஜன் என்ற சிறைக் காவலர் தனது பூட்ஸ் காலால் மிதித்த கொடுமையும் விரிவாகப் பதிவாகியிருந்தது.
முன்னதாக ஏப்ரல் 6 விவாதத்தின் போது, "தந்தை செய்த தவறுகளுக்கு மகன் தண்டனை அனுபவிக்க வேண்டிய சூழல் வரலாம்" என உறுப்பினர் ஜெபமணி பேசியதாகச் சுட்டிக்காட்டி அரசு கொறடா துரை கோவிந்தராஜன் பேசினார். இதற்கு உடனடியாகக் குறுக்கிட்ட பேராசிரியர் க.அன்பழகன், முன்னாள் முதலமைச்சரின் மகன் என்பதால் தான் ஸ்டாலின் சிறையிலடைக்கப்பட்டுத் தாக்கப்பட்டார் என்ற உள்நோக்கத்தோடு பேசுவது சரியல்ல எனக் கண்டித்தார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டமன்ற விவாதங்களின் பதிவுகள் அனைத்தும், அவசரநிலைக் காலத்தில் மு.க.ஸ்டாலின் ஒரு அரசியல் கைதியாகவே சிறையில் அடைக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டார் என்பதைத் தெள்ளத்தெளிவாக உறுதி செய்கின்றன என 'தி இந்து' நாளிதழ் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/misa-prison-assembly-records-confirm-mk-stalin-political-prisoner-emergency-period-12542065





