ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2026

போலியாக ஆன்லைனில் கேரள லாட்டரி: 3 வெப்சைட்களை தொடங்கி நடத்திய வாலிபர் கைது

 

SK 6 lottery

கேரள மாநில லாட்டரி பெயரில் போலி இணையதளங்களை உருவாக்கி, ஆன்லைனில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து பொதுமக்களை ஏமாற்றியதாக தமிழகத்தை சேர்ந்த ஒருவரை கேரளா தலைநகர் திருவனந்தபும் நகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த தினேஷ் ஏ. (25) என போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணையில், கேரள அரசின் அதிகாரப்பூர்வ லாட்டரி இணையதளத்தைப் போல தோற்றமளிக்கும் வகையில், கேரள மாநில லாட்டரியின் பெயர், அதிகாரப்பூர்வ லோகோ மற்றும் அரசு முகவரியை பயன்படுத்தி போலி இணையதளங்களை உருவாக்கி, மக்களை நம்ப வைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இந்த இணையதளங்களில் கேரள மாநில லாட்டரி சீட்டுகளை ஆன்லைனில் வாங்கலாம் என விளம்பரப்படுத்தப்பட்டதுடன், சமூக வலைதளங்களிலும் இதற்கான விளம்பரங்கள் பரவலாக வெளியிடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், லாட்டரி சீட்டுகளை வாங்க விரும்புவோருக்கு வாட்ஸ்அப் மூலம் க்யூஆர் (QR) குறியீடுகள், யுபிஐ (UPI) கட்டண விவரங்கள் மற்றும் பிற டிஜிட்டல் கட்டண வசதிகள் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பணம் செலுத்தியவர்களுக்கு லாட்டரி சீட்டுகள் பார்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இது குறித்து நடந்த விசாரணையில், keralalotteryonlinebuy.com, keralalotteryonlinepurchase.com, keralalotteryonlinebooking.com ஆகிய மூன்று இணையதளங்கள் மூலம் பலரை ஏமாற்றியிருப்பது கண்டறியப்பட்டது. பணம் செலுத்தியும் லாட்டரி சீட்டுகள் கிடைக்காததால் பாதிக்கப்பட்டவர்கள் கேரள மாநில லாட்டரி துறையை அணுகினர். இதையடுத்து, லாட்டரி துறை திருவனந்தபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தது. வாட்ஸ்அப்பில் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண்கள், இணையதளங்களின் டொமைன் பதிவு விவரங்கள் மற்றும் யுபிஐ பரிவர்த்தனை தகவல்களை ஆய்வு செய்த போலீசார், தினேஷை அடையாளம் கண்டு கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

கேரள மாநில லாட்டரி சீட்டுகள் எந்த இணையதளம் அல்லது சமூக வலைதளங்களிலும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவதில்லை என்று திருவனந்தபுரம் நகர மாவட்ட போலீஸ் கமிஷனர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், இதுபோன்ற மோசடி சலுகைகளை நம்ப வேண்டாம் என்றும், ஆன்லைன் நிதி மோசடி அல்லது சைபர் குற்றங்களுக்கு ஆளானவர்கள் தேசிய சைபர் குற்ற புகார் இணையதளம் (NCRP) அல்லது 1930 என்ற உதவி எண்ணை தொடர்புகொண்டு உடனடியாக புகார் அளிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-person-arrested-in-kerala-for-fake-lottery-website-update-in-tamil-12220062