மேகதாது விவகாரம்; முதல்வர் இதனை உடனே செய்ய வேண்டும்:
/indian-express-tamil/media/media_files/2026/08/01/cpi-r-mutharasan-urge-tn-cm-vijay-mekedatu-dam-issue-tamil-news-2026-08-01-23-24-03.jpg)
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் உடனடியாக அனைத்துக் கட்சி மற்றும் அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் முத்தரசன் வலியுறுத்தினார்.
திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சிவா தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள், மாநகராட்சி கவுன்சிலர் சுரேஷ், மாவட்ட பொருளாளர் செல்வகுமார், தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் அயிலை சிவசூரியன், திராவிட மணி, மாவட்டக் குழு உறுப்பினர் முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றிய முத்தரசன், கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்றும், காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை கர்நாடக அரசு முழுமையாக மதித்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் ஒன்றிய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், "மேகதாது அணை கட்டுவதற்கு தமிழ்நாடு, கேரளா அல்லது புதுச்சேரியிடம் அனுமதி பெறத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறவில்லை. ஆனால், அவ்வாறு மத்திய இணை அமைச்சர் தெரிவித்திருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. நடுநிலையுடன் செயல்பட வேண்டிய ஒன்றிய அரசு, கர்நாடக அரசுக்கு ஆதரவாகவும் தமிழகத்திற்கு எதிராகவும் செயல்படுகிறது" என்றார்.
மேலும், "உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு மாதந்தோறும் 177 டி.எம்.சி. காவிரி நீர் வழங்கப்பட வேண்டும். ஆனால், காவிரி மேலாண்மை ஆணையம் 4 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்துவிடுமாறு கேட்டுக்கொண்டதைக் கூட கர்நாடக அரசு ஏற்க மறுத்து வருகிறது. தேசியக் கட்சியான காங்கிரஸ் ஆளும் கர்நாடக அரசின் இந்த பொறுப்பற்ற அணுகுமுறை கவலை அளிக்கிறது" என்று குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் இந்த ஆண்டு 6 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட வேண்டிய குருவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பா சாகுபடி குறித்தும் பெரும் கேள்விக்குறி எழுந்துள்ளதாகவும் அவர் கூறினார். மும்முனை மின்சாரம் போதுமான அளவில் கிடைக்காததும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்திருப்பதும் விவசாயிகளை கடுமையாக பாதித்துள்ளதாகவும், மாநிலம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபடும் நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
காவிரி விவகாரத்தை ஒரு அரசியல் கட்சியின் பிரச்சினையாக அல்லாமல், தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சினையாக மாநில அரசு அணுக வேண்டும் என்று வலியுறுத்திய அவர், "கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலில் பேசுவது போல, தமிழகத்திலும் ஒருமித்த கருத்தை உருவாக்க முதலமைச்சர் உடனடியாக அனைத்துக் கட்சி மற்றும் அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தை கூட்ட வேண்டும். மேலும், குருவை சாகுபடி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும்" என்றார்.
தி.மு.க. சார்பில் தஞ்சாவூரில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, "அழைப்பு வந்துள்ளதா என்பது எனக்குத் தெரியவில்லை" என்று முத்தரசன் பதிலளித்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்





