திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் (கே.டி. தியேட்டர் அருகில்) உள்ள பாஸ்போர்ட்டு சேவை மையத்தில் (பாஸ்போர்ட்டு சேவா கேந்திரா) வருகிற 8–ந்தேதி (சனிக்கிழமை) மாணவர்களுக்கான சிறப்பு பாஸ்போர்ட்டு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த 16 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு தங்களது பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பங்களை கொடுக்கலாம். காலை 9 மணி முதல் 11 மணி வரை முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த முகாம் செயல்படும்.
இந்த முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பம் அளிக்கும் மாணவ– மாணவிகள் முன்கூட்டியே ‘அனுமதி’ தேதி பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. முகாமுக்கு அவர்கள் வரும்போது ஆன்லைன் மூலம் பதிவு செய்ததற்கான ‘பிரிண்ட் அவுட்’ நகல், விண்ணப்பதாரர்கள் 26.1.1989–க்கு பின்னர் பிறந்தவர்களாக இருப்பின் பிறப்பு சான்றிதழ் (அதில் விண்ணப்பதாரரின் பெயர், தாய், தந்தை பெயர்கள் எழுத்துப்பிழையின்றி விண் ணப்பத்தில் உள்ளதுபோல் இருக்கவேண்டியது கட்டாயம்), தற்போதைய முகவரிக்கான ஆதாரம், பத்தாம் வகுப்பு அல்லது 12–ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கல்லூரி மாணவர்கள் என்றால் நம்பக சான்றிதழ் (போன பைட் சர்டிபிகேட்), கல்லூரி மாணவர் என்பதற்கான அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.
18 வயதுக்கு உட்பட்ட மாணவர் என்றால் விண்ணப்பதாரரின் தாய் தந்தையரின் பாஸ்போர்ட் நகலுடன் ‘எச்’ படிவத்தில் தாய், தந்தை இருவரின் கையெழுத்து பெற்றிருக்கவேண்டும். பெற்றோருக்கு பாஸ்போர்ட் இல்லை என்றால் அவர்கள் அதற்கான உறுதிமொழி பத்திரம் ஆகியவற்றுடன் வரவேண்டும். பெற்றோரும் உடன் வரவேண்டும். விண்ணப்பதாரருக்கு முகவரி ஆதாரம் இல்லை என்றால் பெற்றோருக்கான முகவரி ஆதாரத்தை சமர்ப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.1500 மட்டுமே.
தற்போது திருச்சி, தஞ்சை ஆகிய இரு இடங்களிலும் பாஸ்போர்ட்டு சேவை மையம் இயங்கி வருகிறது. இந்த இரு மையங்களிலும் 8 மாவட்டங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மாவட்ட வேறுபாடு இன்றி எந்த சேவை மையத்திலும் தங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க தேர்வு செய்யும் வகையில் தற்போது விதி முறைகள் தளர்த்தப்பட்டு உள்ளது.
ஏற்கனவே பாஸ்போர்ட்டு வைத்து இருப்பவர்கள் தங்களது பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டால், காலாவதியான தேதியில் இருந்து 3 ஆண்டுகள் வரை எந்தவித போலீஸ் விசாரணை அறிக்கையும் இன்றி புதிய பாஸ்போர்ட்டு வழங்கப்படும். இதற்கு அவர்கள் விண்ணப்பித்த தேதியில் இருந்து 4 அல்லது 5 வேலை நாட்களில் புதிய பாஸ்போர்ட்டு வழங்கப்பட்டுவிடும்.
இதற்கு பழைய பாஸ்போர்ட்டு தொடர்பாக எந்தவிதமான பாதகமான குறிப்புகளும் இடம்பெற்றிருக்க கூடாது. விண்ணப்பதாரர் முகவரி மாற்றம் செய்து இருந்தால் அதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். பழைய பாஸ் போர்ட்டு சேதம் அடையாமல் இருக்கவேண்டும்.
விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலமாகவும் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம். மரக்கடை பகுதியில் உள்ள திருச்சி மண்டல பாஸ்போர்ட்டு அலுவலகம் மற்றும் திருச்சி, தஞ்சை ஆகிய இரு இடங்களிலும் செயல்பட்டு வரும் பாஸ்போர்ட்டு சேவை மையங்களிலும் இயங்கி வரும் முன்னாள் ராணுவத்தினர் முகாம் மூலமும் ஒரு விண்ணப்பத்துக்கு ரூ.90 கட்டணமாக செலுத்தி பதிவு செய்யலாம்.
மேலும் 8 மாவட்டங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களிலும் விண்ணப்பத்திற்கு தலா ரூ.100 கட்டணம் செலுத்தியும் பதிவு செய்யலாம். விண்ணப்பம் செய்து விட்டு பாஸ்போர்ட்டு கிடைக்கப்பெறாதவர்கள் 04312707203, 2700699 என்ற தொலைபேசி எண்களிலும், 18002581800 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம்.