வெள்ளி, 16 ஜனவரி, 2015

ஜின்னிடமிருந்து மீட்டவர்!.




ادى لعبد الله ذي النبالة *بنتا له اذ بلغوا الرسالة

قدموس جن الكرخذو الضخامة *من قطبهم هادي اولى الضلالة

அப்துல்லாஹ் என்பாரின் மகனை கர்க் எனும் பகுதியில் இருந்த சக்தி வாய்ந்த ஜின்னிடமிருந்து அப்துல் காதிர் மீட்டுக் கொடுத்தார். வழிகேடர்களுக்கு வழிகாட்டக்கூடிய மக்களுக்கு அச்சாணியாகத் திகழ்ந்த அப்துல் காதிரிடம் அவர் முறையிட்ட போது இவ்வாறு நிகழ்த்திக் காட்டினார்.

இந்தக் கவிதை வரியில் என்ன கூறப்படுகின்றது என்பதை ஹிகாயத் பகுதியின் துணையுடன் விளங்குவோம். அதன் பிறகு இதிலுள்ள அபத்தங்களை அலசுவோம்.

அப்துல் ஹக் கூறுகிறார்.

என் மகள் மாடியின் மேற்பகுதியிலிருந்து அடையாளம் தெரியாமல் கடத்தப்பட்டாள். நான் அப்துல் காதிர் ஜீலானியிடம் வந்து விபரம் கூறினேன். அதற்கவர் கர்க் எனும் பகுதியில் உள்ள பாழடைந்த இடத்துக்குச் சென்று மன நிம்மதியுடன் அமர்வீராக. அல்லாஹ்வின் பெயரால் அப்துல் காதிரின் எண்ணப்படி எனக் கூறி உம்மைச் சுற்றி ஒரு வட்டம் போடுவீராக. இரவு சூழ்ந்தததும் ஜின் பயங்கரமான தோற்றத்தில் உம்மைக் கடந்து செல்லும். பின்னர் ஜின்களின் அரசர் புடை சூழ வருவார். அவர் உமது நோக்கத்தைப் பற்றிக் கேட்பார். என்னைப் பெரியார் அப்துல் காதிர் அனுப்பியதாகக் கூறிவிட்டு உன் மகள் காணாமல் போனதைக் கூறு என்றார். அவ்வாறே நான் சென்று அவர் கட்டளையிட்டவாறு செய்தேன். அவர் கூறியவாறு நடந்ததைக் கண்டேன். ஜின்களின் அரசர் குதிரையில் ஏறி வந்தார். அவரது படையினர் அவரைச் சுற்றிக் காவலுக்கு வந்தனர். அவர் நின்று மனித இனத்தைச் சேர்ந்தவனே! உனக்கு என்ன நேர்ந்தது எனக் கேட்டார். அப்துல் காதிர் உம்மிடம் என்னை அனுப்பினார் என்று நான் கூறினேன். உடனே அவர் கீழே இறங்கி மண்ணை முத்தமிட்டு வட்டத்தின் வெளியில் அமர்ந்தார். நான் மகள் விஷயத்தைத் தெரிவித்தேன். உடனே அவர் தம்மைச் சூழ நின்றவர்களை நோக்கி இவர் மகளைக் கடத்தியவர் யார்எனக் கேட்டார். யாருக்கும் தெரியவில்லை. பின்னர் சீன நாட்டைச் சேர்ந்த முரட்டு ஜின் ஒன்று கொண்டு வரப்பட்டது. அதன் கழுத்தை அவர் வெட்டி விட்டு என் மகளை என்னிடம் ஒப்படைத்தார்.

முஹ்யித்தின் மவ்லிதின் ஹிகாயத்தில் கூறப்படும் விளக்கம் இது தான். இந்தக் கவிதையிலும், விளக்கத்திலும் கூறப்படும் அபத்தங்களை ஒவ்வொன்றாக நாம் ஆராய்வோம்.

இந்தக் கவிதையின் நாயகனாகக் கூறப்படும் அப்துல் ஹக் என்பார் யார்இவரது வரலாறு என்னயாருக்கும் தெரியாது.

ஜின்கள் இவரது மகளைக் கடத்திச் சென்ற விபரமும் அதன் பிறகு நடந்த நிகழ்ச்சிகளும் முன் கூட்டியே அப்துல் காதிர் ஜீலானிக்கு எவ்வாறு தெரிந்ததுமறைவான விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது என்பதைத் தக்க சான்றுகளுடன் முன்னர் நாம் விளக்கியுள்ளோம். இந்தச் சான்றுகளுக்கு முரணாக இந்தக் கதை அமைந்துள்ளது.

ஜின் என்றொரு படைப்பு இருப்பது உண்மை தான். ஆயினும் அவை மனிதர்களைக் கடத்திச் செல்லும் என்பதற்கு எந்த ஆதாரமும் குர்ஆனிலோ, ஹதீஸிலோ கிடையாது. கெட்ட ஜின்களாக இருந்தால் கூட அவை இறைவனது கட்டளைக்கு மாறு செய்யுமே தவிர மனிதர்களைக் கடத்திச் செல்லும் என்பதற்கு எந்தச் சான்றுமில்லை.

அப்துல் காதிர் ஜீலானி காலத்திற்கு முன்பிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலம் வரையிலுள்ள ஐநூறு வருடங்களில் எந்த ஆணும் பெண்ணும் ஜின்களால் கடத்திச் செல்லப்பட்டதாகவும் ஆதாரம் இல்லை.

ஜின்கள் மனிதர்களைக் கடத்திச் செல்லும் வழக்கமுடையவை என்றால் அறுநூறு கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் இன்றைய உலகில் எந்த மனிதனும் ஜின்களால் கடத்தப்படாத மர்மம் என்ன?

இந்தக் கதையில் சீனாவைச் சேர்ந்த முரட்டு ஜின் கடத்தியதாகக் கூறப்படுகின்றது. ஒரு வேளை சீனாவில் தான் மனிதக் கடத்தலில் ஈடுபடும் ஜின்கள் இருக்க கூடுமோஎன்று கருத முடியவில்லை. ஏனெனில் சீனாவிலும் கூட ஜின்களால் எந்த மனிதனும் கடத்தப்படவில்லை. எவனோ கற்பனை செய்து உளறியிருக்கிறான் என்பதே உண்மை.

ஜின்கள் மனிதர்களைக் கடத்திச் சென்று விடும் என்பதை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் கூட ஜின்கள் அப்துல் காதிர் ஜீலானிக்குக் கட்டுப்பட்டு நடக்கும் என்பது குர்ஆனுடைய போதனைக்கு மாற்றமாகும்.

ஜின்கள் மனிதர்களை விட அதிகமான ஆற்றலுடையவை. மனிதர்களால் செய்ய முடியாத பல காரியங்களை அவை செய்து முடித்து விடும் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. சுலைமான் நபி காலத்தில் அண்டை நாட்டு அரசியின் சிம்மாசனத்தைக் கண் மூடி திறப்பதற்குள் கொண்டு வருவதாக ஒரு ஜின் கூறிய விபரம் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 27:40)

மனிதனைப் போல் பகுத்தறிவும் ஜின்களுக்கு உள்ளது. என்னை வணங்குவதற்காகவே ஜின்களையும் மனிதர்களையும் படைத்துள்ளேன் என்று இறைவன் கூறுகிறான். (51.56)

பகுத்தறிவு வழங்கப்பட்டவர்களுக்குத் தான் இறைவன் சட்ட திட்டங்களை வழங்கியுள்ளான். மனிதனைப் போலவே ஜின்களும் இறைவனை வணங்கக் கடமைப்பட்டுள்ளன என்பதிலிருந்து ஜின்களுக்குப் பகுத்தறிவு உள்ளதை அறியலாம்.

மனிதனைப் போலவே பகுத்தறிவு வழங்கப்பட்டு, மனிதர்களை விடப் பல மடங்கு ஆற்றலும் வழங்கப்பட்ட ஜின்களை மனிதன் ஒருக்காலும் வசப்படுத்த முடியாது. யானை சிங்கம் போன்ற விலங்குகளை மனிதன் வசப்படுத்தலாம்அவற்றின் வலிமை மனிதனை விட அதிகம் என்றாலும் பகுத்தறிவு அவற்றுக்கு இல்லாததால் அவற்றை மனிதன் வசப்படுத்திக் கொள்கிறான். ஜின்களுக்குப் பகுத்தறிவும் மனிதனை விட அதிகமான ஆற்றலும் இருப்பதால் அவற்றை மனிதனால் கட்டுப்படுத்த முடியாது என்பது தான் உண்மை.

சுலைமான் நபிக்கு அல்லாஹ் தனிச் சிறப்பாக ஜின்களை வசப்படுத்திக் கொடுத்திருந்தான். இது அவர்களுக்கு மட்டும் இறைவன் வழங்கிய தனிச் சிறப்பாகும்.

 'என் இறைவா! என்னை மன்னித்து விடு! எனக்குப் பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு! நீயே வள்ளல் என (சுலைமான்) கூறினார்.

அல்குர்ஆன் 38:35)

சுலைமான் நபியவர்கள் தமக்கு வழங்கப்பட்ட அளவு அதிகாரம் யாருக்கும் வழங்க வேண்டாம் என துஆச் செய்துள்ளதில் ஜின்களை வசப்படுத்தும் அதிகாரமும் அடக்கம்.

நேற்றிரவு ஒரு ஜின் அட்டூழியம் செய்தது. அதைப் பிடித்து துணில் கட்டி வைத்து காலையில் உங்களுக்குக் காட்ட நினைத்தேன். என் சகோதரர் சுலைமானின் துஆ நினைவுக்கு வந்ததால் அதை விட்டு விட்டேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ள சுலைமான் நபியின் பிரார்த்தனையில் ஜின்களை வசப்படுத்தியிருந்ததும் அடங்கும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.

இந்தக் கதையில் அப்துல் காதிருடைய பெயரால் போடப்பட்ட வட்டத்துக்குள் நுழைய ஜின்களின் அரசர் அஞ்சியுள்ளார். அப்துல் காதிருடைய பெயரைக் கேட்டதும் குதிரையிலிருந்து (ஜின்களுக்கு ஏன் குதிரை?) இறங்கி மண்ணை முத்தமிட்டுள்ளார். அப்துல் காதிருக்கு ஜின்களும்இ ஏனைய படைப்புக்களும் கட்டுப்பட்டன என்று பிரமையை ஏற்படுத்தி அவரால் ஆகாதது ஏதுமில்லை என்று நம்ப வைத்து அப்துல் காதிரை குட்டித் தெய்வமாக ஆக்குவதே இந்தக் கதையின் நோக்கம்.

இது போன்ற கப்ஸாக்களைப் படிப்பதால் பாவம் சேருமாபுண்ணியம் கூடுமாமவ்லிது அபிமானிகள் சிந்திக்கட்டும். புராணங்களிலிருந்து காப்பியடிக்கப்பட்ட இது போன்ற கதைகளைக் கேள்விப்படும் மற்ற மதத்தவர்கள் இஸ்லாத்தின் பால் அபிமானம் கொள்வார்களாஓரிறைக் கொள்கையை ஐயமற வலியுறுத்துகின்ற மார்க்கத்திற்கு இந்தக் கதைகள் களங்கத்தை ஏற்படுத்துகின்றன. இஸ்லாத்தை நாடி வரும் மக்களைத் தயங்கி நிற்க வைக்கிறது. மவ்லிது அபிமானிகள் இதை உணர்ந்து மவ்லிது பக்தியிலிருந்து விடுபடுவார்கள் என்று நம்புகிறோம்.


அப்துல் காதிர் ஜீலானியைக் கடவுள் நிலைக்கு உயர்த்திக் காட்டக்கூடிய கதைகள் முஹ்யித்தீன் மவ்லிதில் மலிந்து கிடப்பதை இது வரை கண்டோம். இறைவனின் தன்மைகளை அவருக்கு வழங்கி அவரை நேரடியாக அழைத்துப் பிரார்த்தனை செய்யும் வகையிலும் பல வரிகள் முஹ்யித்தீன் மவ்லிதில் இடம் பெற்றுள்ளன. அவற்றை இங்கு காண்போம்.