இந்திய அரசால் வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதோ, பெற மறுப்பதோ சட்டப்படி குற்றம் எனவும், அவ்வாறு மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய ரிசர்வ் வங்கி கடந்த 2009-ம் ஆண்டு பத்து ரூபாய் நாணயங்களை அறிமுகம் செய்தது. அப்போது, அந்த நாணயத்தில் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ மற்றும் ‘இணைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்’ என்ற கருப்பொருள் இடம்பெற்றிருந்தது. பின்னர், அவ்வப்போது புதிய டிசைன்களில் 10 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டு வரப்படுகிறது.
எனினும், பத்து ரூபாய் நாணயத்தின் நம்பகத்தன்மை குறித்து அவ்வப்போது வெளியாகும் வதந்தி காரணமாக கடைக்காரர்கள், வணிகர்கள், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவற்றை வாங்க மறுக்கின்றனர். இதனால், பொதுமக்கள் பத்து ரூபாய் நாணயங்களை வாங்கவும், வைத்திருக்கவும் தயக்கம் காட்டுகின்றனர்.
இத்தகைய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பத்து ரூபாய் நாணயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் பொதுமக்களிடையே, கடைக்காரர்கள், வணிகர்களிடையே சற்று தயக்கம் நீடித்தவண்ணம் உள்ளது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
”இந்திய அரசால் வெளியிடப்பட்ட நாணயத்தை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம். வாங்க மறுக்கும் கடை மீது புகார் அளிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதோ, பெற மறுப்பதோ சட்டப்படி குற்றமாகும். அதனால், 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
source https://news7tamil.live/if-you-refuse-to-buy-10-rupees-coin-3-years-imprisonment-ramanathapuram-district-collector-warns.html