/indian-express-tamil/media/media_files/2025/12/27/flat-headed-cat-2025-12-27-16-28-16.jpg)
(Image: DNP/Panthera Thailand)
இயற்கை அன்னை எப்போதும் தன் ரகசியங்களை எளிதில் வெளிப்படுத்துவதில்லை. சுமார் 30 ஆண்டுகளாக மனிதர்களின் கண்களில் படாமல், நான் இன்னும் இருக்கிறேன் என்று சொல்லாமல் மறைந்து வாழ்ந்த ஒரு விசித்திரமான இனம் இப்போது மீண்டும் உலகிற்குத் தன்னை வெளிப்படுத்தியுள்ளது. அதுதான் 'தட்டைத் தலைக் காட்டுப்பூனை' (Flat-headed cat).
27 12 2025
சாதாரண பூனைகளைப் போலல்லாமல், தட்டையான தலை மற்றும் தண்ணீரில் மீன் பிடிக்கும் அசாத்திய திறமை கொண்ட இந்த பூனை இனம், 1990-களுக்குப் பிறகு தாய்லாந்தில் யாராலும் பார்க்கப்படவில்லை. "இனி இந்த இனம் அவ்வளவுதான், அழிந்துவிட்டது" என்று விஞ்ஞானிகள் கவலையில் இருந்தபோதுதான் அதிசயம் நிகழ்ந்தது. தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள அடர்ந்த சதுப்பு நிலக் காடுகளில் வைக்கப்பட்டு இருந்த தானியங்கி கேமராக்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தபோது, அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. வெறும் ஒரு பூனை மட்டும் தென்படவில்லை; ஒரு தாய் பூனை தனது செல்லக் குட்டியுடன் வலம் வரும் காட்சி பதிவாகி இருந்தது.
இவை மறைந்து வாழவில்லை, மாறாக வெற்றிகரமாகத் தங்கள் வம்சத்தை அங்கு விருத்தி செய்து வருகின்றன. மற்ற பூனைகள் தண்ணீரைத் தவிர்க்கும், ஆனால் இது தண்ணீருக்குள் புகுந்து மீன்களை வேட்டையாடும் ஒரு 'டைவர்'. சதுப்புநிலங்கள் மற்றும் ஆற்றுப் பகுதிகள் தான் இதன் உலகம். மனித நடமாட்டம் கொஞ்சம் தெரிந்தாலும் உடனே மறைந்துவிடும் 'மிஸ்டர் இந்தியா' பாணி பூனை இது. காடுகள் அழிக்கப்பட்டாலும், சதுப்புநிலங்கள் பாதிக்கப்பட்டாலும், இயற்கை எவ்வளவு போராட்டங்களுக்கு மத்தியிலும் உயிர் பிழைக்கும் என்பதற்கு இதுவே பெரிய சாட்சி.
அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட ஒரு இனம் மீண்டும் கிடைப்பது என்பது, வரலாற்றில் புதைந்து போன ஒரு புதையலை எடுப்பது போன்றது. இப்போது இந்த பூனைகளின் வாழ்க்கை முறை, அவை எப்படி இத்தனை ஆண்டுகள் தப்பித்தன என்பது குறித்த புதிய ஆய்வுகளைத் தொடங்க விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர். காடுகள் என்பது மரங்கள் மட்டுமல்ல, அவை சொல்லப்படாத பல்லாயிரக்கணக்கான கதைகளின் கருவூலம் என்பதை இந்தத் தட்டைத் தலைக் காட்டுப்பூனை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
source https://tamil.indianexpress.com/science/back-from-the-brink-rare-flat-headed-cat-rediscovered-in-thailand-after-30-years-10951375





