திருநெல்வேலி மணி மூர்த்தீஸ்வரம் பகுதியில் பட்டியல் சமூக இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து தாக்கப்பட்ட விவகாரத்தில் ஆறு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 30-ம் தேதி திருநெல்வேலி மாநகரத்திற்கு உட்பட்ட மணி மூர்த்தீஸ்வரம் ஆற்றுப்பகுதியில் இளைஞர்கள் இரண்டு பேரை, 6 பேர் கொண்ட மர்ம கும்பல் தாக்கி அவர்களிடமிருந்த செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் எந்த சாதி என கேட்டு தெரிந்துகொண்ட பின், இளைஞர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து அவர்கள் மீது சிறுநீர் கழித்துள்ளனர். அவர்களை மாலை முதல் இரவு வரை வைத்திருந்து சித்தரவதை செய்தனர்.
ஊர் பெயரையும் சாதி பெயரையும் கேட்டு தாக்குதல் நடத்தியதாக படுகாயம் அடைந்த இளைஞர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்தைச் சேர்ந்த (1) பொன்னுமணி, (2) முத்து என்ற நல்லமுத்து, (3) லெட்சுமணகுமார்,(4) ஆயிரம், (5) ராமர், (6) சிவன் என்ற சிவா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் ச.மகேஸ்வரியின் உத்தரவின்படி கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.
source https://news7tamil.live/tirunelveli-caste-atrocities-6-arrested-in-thugs-case.html