வியாழன், 6 மார்ச், 2025

அனுமதியின்றி கையெழுத்து இயக்கம் நடத்தியதாக கைது; போலீஸ் வாகனத்தில் ஏற மறுத்து கடும் வாக்குவாதம்

 

6 3 25


Tamilisai issue

சென்னையில் பா.ஜ.க சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்திற்கு முறையாக அனுமதி வாங்கவில்லை என தமிழிசை சௌந்தரராஜன் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக, மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ. 2,152 கோடி கல்வி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி கிடையாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார்.

குறிப்பாக, "மும்மொழிக் கொள்கையை பிற மாநிலங்கள் ஏற்கும்போது தமிழ்நாடு மட்டும் ஏற்க மறுப்பது ஏன்? புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டால்தான் கல்வி நிதி விடுவிக்கப்படும். புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்காத பட்சத்தில் ரூ. 2 ஆயிரம் கோடியை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறது" எனத் தெரிவித்தார்.

இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் இருமொழிக் கொள்கைக்கு ஆதரவாக பேசிவரும் நிலையில், தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என பா.ஜ.க-வினர் அறிவுறுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக 'சமகல்வி எங்கள் உரிமை' என்ற கையெழுத்து இயக்கத்தை பா.ஜ.க தொடங்கியுள்ளது. சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (மார்ச் 5) தொடங்கிய இந்நிகழ்வில் அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர்.

இந்த இயக்கம் தமிழகம் முழுவதும் செயல்படப்போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில், இன்று (மார்ச் 6) காலை சென்னை எம்.ஜி.ஆர் நகரில் தமிழிசை சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இப்பகுதியில் கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதி பெறவில்லை எனக் கூறி, பா.ஜ.க-வினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

ஆனால், அனுமதி பெற்று தான் கையெழுத்து இயக்கம் நடைபெறுவதாகக் கூறிய தமிழிசை, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், போலீசார் அவரை கைது செய்தனர். எனினும், போலீஸ் வாகனத்தில் ஏற மறுத்து அவர் கடும் வாக்குவாதம் செய்தார். இதன் காரணமாக அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilisai-arrested-for-conducting-signature-movement-without-permission-8826809

Related Posts: