22 2 2026
/indian-express-tamil/media/media_files/2026/02/22/bengal-sir-2026-02-22-15-01-12.jpg)
ஏ.ஐ மூலம் போலி ஐடி கார்டுகள், இறந்தவருக்கும் அப்ரூவல்... மே.வங்கத்தில் தேர்தல் ஆணையம் நடத்திய சூப்பர் செக்கிங்
மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் (Special Intensive Revision) போது, அதிர்ச்சியூட்டும் வகையில் லட்சக்கணக்கான போலி ஆவணங்கள் மற்றும் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. தொடர்ந்து சுமார் 68 லட்சம் வாக்காளர் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் ஆணையம் நடத்திய 'சூப்பர் செக்கிங்' (Super Checking) ஆய்வில் தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாங்கர் (Bhangar) தொகுதியில் ஜன்னதுல் மொல்லா என்பவர் சமர்ப்பித்த தனது தந்தையின் அடையாள அட்டை, கூகுளின் 'ஜெமினி' ஏ.ஐ சாப்ட்வேர் மூலம் உருவாக்கப்பட்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் புகைப்படத்தில் ஜெமினி லோகோவே இருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். தந்தையை விட மகன் 50 வயது மூத்தவராக இருப்பது போன்ற குளறுபடிகளும் அதில் இருந்தன.
மந்திர் பஜார் தொகுதியில் அபு தாஹிர் மிர் என்பவரது பிறந்த தேதி 13.11.2003 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அவரது பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்ட தேதியோ 07.11.2003 (பிறப்பதற்கு 6 நாட்களுக்கு முன்) என உள்ளது. சில வாக்காளர்கள் தங்களுக்கு 2 முதல் 4 மாத இடைவெளியில் அடுத்தடுத்த குழந்தைகள் பிறந்ததாகப் போலி ஆவணங்களைத் தந்துள்ளனர். உதாரணமாக, பாங்கர் தொகுதியில் 1 குழந்தைக்கு ஏப்ரல் 1994-லும், அடுத்த குழந்தைக்கு ஆகஸ்ட் 1994-லும் பிறந்ததாகக் கணக்கு காட்டப்பட்டுள்ளது.
கேனிங் பூர்பா தொகுதியில் 1,300-க்கும் மேற்பட்ட ஐ.டி.சி.எஸ் சான்றிதழ்கள் முகவரிச் சான்றாக வழங்கப்பட்டுள்ளன. பொதுவாகப் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் இந்தச் சான்றிதழ்கள், இங்கே ஆண் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், அரசு விடுமுறை நாட்களான டிசம்பர் 25, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இந்தச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது போலப் போலியாக உருவாக்கப்பட்டு உள்ளன. மந்திர் பஜார் தொகுதியில் ஷாஹிதுல் ஹக் என்ற வாக்காளர் இறந்துவிட்டதாக அவரது மகனே நேரில் வந்து தகவல் தெரிவித்தும், தேர்தல் பதிவு அதிகாரிகள் (AERO & DEO) அவரது பெயரைத் தடையின்றிப் பட்டியலில் சேர்க்க 'அப்ரூவ்டு' (Approved) செய்துள்ள கொடுமையும் நடந்துள்ளது.
ஏற்கனவே 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 10 லட்சம் பெயர்கள் நீக்கப்படலாம். இதன் மூலம் மொத்தம் 68 லட்சம் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது. போலி ஆவணங்கள் காரணமாக 30 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை மீண்டும் சரிபார்க்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது. போலி ஆவணங்களைச் சரிபார்க்காமல் அனுமதி அளித்த தேர்தல் அதிகாரிகளுக்கு (EROs/AEROs) எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையம் எச்சரித்துள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 28-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதுவரை சரிபார்ப்புப் பணிகளை முடிக்கத் தேர்தல் ஆணையம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
source https://tamil.indianexpress.com/india/ai-generated-voter-ids-to-dead-man-appearing-for-hearings-super-checking-puts-scanner-on-30-lakh-more-names-in-bengal-sir-11144702





