8 4 2025
/indian-express-tamil/media/media_files/2025/04/08/IweclXtQYQKALKLXOK9L.jpg)
சீனா விதித்த வரியை திரும்ப பெறாவிட்டால் 50% கூடுதல் வரி! - டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 2-ம் தேதி பல்வேறு நாடுகள் மீதும் பரஸ்பர வரியை விதித்தார். இந்த வரி விதிப்பால் உலக பொருளாதாரம் ஆட்டம் காணும் சூழல் உருவாகியுள்ளது. பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி கண்டன. பரஸ்பர வரியை பொருத்தவரை இந்தியாவுக்கு 26% கூடுதல் வரியை விதித்த டிரம்ப், சீனாவுக்கு மீண்டும் 34% வரிகளை விதித்தார்.
டிரம்பின் வரி விதிப்புக்குப் பதிலடியாக அமெரிக்க பொருள்கள் மீது 34% கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்படுவதாக சீனா வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது. 10-ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள இந்த கூடுதல் வரி விதிப்பு, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருள்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் இந்த பதிலடி நடவடிக்கையால் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எரிச்சல் அடைந்துள்ளார்.
இந்த நிலையில், (ஏப். 8) இன்றைக்குள் அமெரிக்க பொருட்களுக்கு சீனா விதித்துள்ள இந்த வரி விதிப்பை திரும்பி பெறாவிட்டால், ஏப்.9 முதல் 50% கூடுதல் வரி விதிக்கப்படும். அதுமட்டுமின்றி, கூடுதலாக, சீனாவுடனான சந்திப்புகள் தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படுவதாக தெரிவித்த டிரம்ப், பிற நாடுகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இதுதொடர்பாக தனது சமூகவலைத்தளத்தில் டிரம்ப் வெளியிட்டு இருக்கும் பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீது சீனா விதித்த 34% வரியை திரும்ப பெற ஒருநாள் அவகாசம் கொடுக்கிறேன். அதற்குள் சீனா தனது வரிவிதிப்பை திரும்ப பெறாவிட்டல், ஏப்.9 முதல் கூடுதலாக 50% வரி விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்
ஏற்கனவே, டிரம்பின் வரி விதிப்பு உலக சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. டவ் ஜோன்ஸ் தொழில்துறை 1,300 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. சீனா மீதான டிரம்பின் நிலைப்பாடு, உக்ரைன் போரை முடிவுக்குக்கொண்டுவர ரஷ்யா மீது சீனாவின் செல்வாக்கைப் பயன்படுத்துவதற்கான அவரது முயற்சிக்கு முரணாகத் தெரிகிறது.
source