/indian-express-tamil/media/media_files/HPJHg3zl4Bitdb57Wldd.jpg)
சமையல் எரிவாயு கேஸ் விலை உயர்வை குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வெந்த புன்னில் வேலை பாய்ச்சுவது போன்று உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்துள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையும் என பொதுமக்கள் எதிர்பார்த்த நிலையில், மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ. 2 மத்திய அரசு உயர்த்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரி உயர்வால், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருக்காது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே, கலால் வரி உயர்த்தப்பட்டதால், தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ50 உயர்த்தப்பட்டு, மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்களுக்கு சிலிண்டர் 853 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. அதேபோல், உஜ்வாலா திட்டத்தின் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்களுக்கு சிலிண்டர் 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலால் வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா? உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும்" என்பது, மத்திய அரசுக்கு மிகவும் பொருந்தும்!
உலக அளவில் கச்சா எண்ணை விலை சரிந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, விலையை ஏற்றாதீர்கள் எனக் கெஞ்சும் பரிதாப நிலைக்கு நாட்டு மக்களைத் தள்ளிவிட்டார்களே!? வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், சமையல் கியாஸ் விலை உயர்வு அமைந்திருக்கிறது. மக்களே… அடாவடியாக விலையை உயர்த்திவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதில் சிறு பகுதியைக் குறைத்து நாடகம் ஆடுவது பா.ஜ.க.வின் வழக்கமாகிவிட்டது.
இந்த நாடகத்தைப் பார்த்துப் பார்த்து நமக்கும் பழக்கமாகிவிட்டது! மத்திய பா.ஜ.க அரசே...தேர்தல் ஏதாவது வரும் வரை காத்திராமல், இந்த விலை உயர்வை உடனே திரும்பப் பெறுக என்று பதிவிட்டுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-cm-stalin-x-post-about-cooking-gas-cylinder-rate-increased-8936995