அமைச்சர் கே.என்.நேரு, மகன், சகோதரர் வீடுகளில் இ.டி சோதனை 7 4 25
/indian-express-tamil/media/media_files/2025/04/07/u6NiJCj41fh18CJhm2xP.jpg)
சென்னையில் அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி எம்.பி.யுமான அருண்நேருவுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி தில்லை நகரிலுள்ள அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அமைச்சர் கே .என் நேருவின் சகோதரர் கே.என் ரவிச்சந்திரன் நடத்தும் கட்டுமான நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தேனாம்பேட்டை, அடையாறு, ஆழ்வார்பேட்டை, பெசன்ட் நகர், சி.ஐ.டி. காலணி, MRC நகர், கோவை சிங்காநல்லூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல் திருச்சி தில்லை நகர் 10வது தெருவில் வசிக்கும் நேருவின் சகோதரி வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல், அமைச்சர் கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் வீடுகளிலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். தி.மு.க. நிர்வாகிகள் கே.என்.நேரு வீடு முன்பு திரண்டதால் அவர்களை அப்புறப்படுத்த காவல்துறையினர் முயற்சித்து வருகின்றனர். ஒட்டுமொத்தமாக நேருவின் உறவினர் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சோதனையின் இறுதியிலேயே சோதனைக்கான முழு விரவம், முக்கிய ஆவணங்கள் ஏதேனும் பறிமுதல் செய்யப்பட்டதா என்பது தெரியவரும். தி.மு.க. முதன்மைச் செயலாளரும், மூத்த அமைச்சருமான கே.என்.நேருவின் உறவினர் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் நடத்தப்படும் சோதனை திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.'
இதனிடையே, அமைச்சர் கே.என்.நேரு சட்டமன்ற நடவடிக்கையில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்