திங்கள், 7 ஏப்ரல், 2025

பிரதமர் சந்திக்க நேரம் கேட்டோம்; இன்னும் ஒப்புதல் தரவில்லை: கோவையில் ஸ்டாலின் பேச்சு

 6 3 24 

cm mk stalin

மக்களுடைய முக்கியமான பிரச்சனைகளுக்கு பதில் சொல்லாமல், தமிழ்நாட்டை தவிர்க்கக்கூடிய பிரதமர் மோடிக்கு மீண்டும் தமிழ்நாட்டில் இடமே இல்லை என்ற பதிலை வருகின்ற தேர்தலில் நீங்கள் வழங்கிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோவையில் பேசினார்.

கொங்குநாடு கலைக்குழு சார்பில் வள்ளிக்கும்மி கின்னஸ் சாதனை புரிந்த 16 ஆயிரம் பெண்களுக்கான பாராட்டு விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: “என்னுரையை துவங்கும் முன்பு 16 ஆயிரம் பெண்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுகள். கலக்கிட்டீங்க, பெண்கள் என்றாலே சாதனை தான் சாதனை என்றாலே பெண்கள் தான்.

என்னை பொறுத்தவரை இந்த ஆட்சியே மகளிர்கான ஆட்சி தான் என்று உங்களுக்கு தெரியும். உங்களை வாழ்த்துவதற்கு வந்துள்ளேன். இந்த நிகழ்வில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி. இந்த நிகழ்வில் 16 ஆயிரம் பெண்கள் பங்கு பெற்றது மிக பெரிய சாதனை.

ஈஸ்வரனின் அன்பை தட்ட முடியாமல் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளேன். சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்தில் வாதாடி மக்கள் மனதில் இடம் பெற்றவர் ஈஸ்வரன். எனக்கு வாக்களிக்காதவர்களுக்கும் என்னுடைய ஆட்சி இருக்கும் என கூறியிருக்கிறேன்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க-விற்கு அமோகமான வெற்றி. அது இந்த ஆட்சிக்கு கிடைக்கும் நற்சான்றிதழ். 2026ல் நாம் தான் வெற்றி பெறுவோம்.

மோடி அரசு வாக்களிக்காத தமிழகத்தை வஞ்சிக்கிறது. அதனையும் தாண்டி நாம் முதலிடத்தில் இருக்கிறோம். பிரதமர் இலங்கையில் இருந்து வருகிறார், தொகுதி மறுசீரமைப்பு பற்றி சட்டமன்றதில் தீர்மானம் போட்டிருக்கிறோம். கட்சிகளை அழைத்து கூட்டம் நடத்தி உள்ளோம். பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு இருக்கிறோம் நேரம் தரபடவில்லை.

இன்னும் இதுவரை அவரிடமிருந்து ஒப்புதல் வரவில்லை. இதற்கிடையில் நீங்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறீர்கள். வரக்கூடிய நீங்கள் அதைத் தெளிவுப்படுத்த வேண்டும், அதை விளக்கமாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று நான் கோரிக்கை வைத்தேன். ஆனால் மக்களுடைய முக்கியமான பிரச்சனைகளுக்கு பதில் சொல்லாமல், தவிர்ப்பவர்களை நாம் என்ன செய்யமுடியும்; வேறு வழியில்லை. அப்படி தமிழ்நாட்டை தவிர்க்கக்கூடிய உங்களுக்கு மீண்டும் தமிழ்நாட்டில் இடமே இல்லை என்ற பதிலை தான் வருகின்ற தேர்தலில் நீங்கள் வழங்கிட வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியின் மூலமாக நான் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

பெண்கள் திரண்டிருக்கின்ற கூட்டத்தில் விரைவாக பேசிவிட்டு செல்ல மனமில்லை. கொங்கு கலைக்குழு சார்பில் நடைபெற்றிருக்கின்ற இந்த வள்ளிக்கும்மி கலை விழா, கலை வளர்ச்சிக்கும், அதன் மூலமாக, தமிழ் பண்பாட்டு வளர்ச்சிக்கும், தமிழர் ஒற்றுமையோடு இருக்கவேண்டும் என்ற அந்த உணர்வோடும் விளங்கிட வேண்டும் என்றும், எந்தவொரு கலையும், சமூக முன்னேற்றத்திற்கும், நல்லிணக்கத்திற்கும் துணையாக அமைய வேண்டும் என்றும் நான் உங்களையெல்லாம் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.” என்று  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.



source https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-appeals-to-the-people-that-modi-who-is-avoiding-tamil-nadu-has-no-place-in-tamil-nadu-again-give-an-answer-8932990

Related Posts: