7 4 25
/indian-express-tamil/media/media_files/2025/04/07/ntAYLfBgP3umEeAkxcN9.jpg)
இன்றைய தினம் (ஏப்ரல் 7) சட்டப்பேரவை அமர்வில் கலந்து கொள்ள வந்திருந்த அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக கவனம் ஈர்க்கும் வகையில், 'அந்த தியாகி யார்?' என்று எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்திருந்தனர்.
முன்னதாக, கடந்த மாதம் டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் முடிவில் ஏறத்தாழ ரூ. 1000 கோடிக்கும் மேல் முறைகேடு நடைபெற்றது என கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான அறிக்கையை அமலாக்கத்துறை வெளியிட்டது.
அதில், "டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது. பல்வேறு தனியார் நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளன. சோதனையில் ரூ. 1000 கோடி கணக்கில் வராதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுபானம் கொள்முதல் மூலம் தனியார் மதுபான நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன. திட்டமிட்டு செலவுகளை அதிகப்படுத்தியும், விற்பனை புள்ளி விவரங்களை உயர்த்தியும் முறைகேடு நடைபெற்றுள்ளது. முறைகேட்டில் மதுபான தயாரிப்பு நிறுவனங்கள், பிற முக்கிய கூட்டாளிகள் பங்கு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் போக்குவரத்து ஒப்பந்தத்தில் முறைகேடு கண்டறியப்பட்டுள்ளது.
உரிய ஆவணங்கள் இல்லாத நிறுவனங்களுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் உயர் அதிகாரிகள், மதுபான நிறுவனங்கள் இடையே நேரடி தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. உயர் அதிகாரிகளின் நெருக்கமானவர்களுக்கே ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. முறையான விவரங்கள் இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு, முறையான கே.ஒய்.சி, பான் விவரங்கள் இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு கூட பார் உரிம டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. போக்குவரத்து, கட்டட உள்கட்டமைப்பு ஆகியவற்றிலும் ஊழல் நடந்துள்ளது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக டாஸ்மாக் முறைகேடு குறித்து பல்வேறு கட்சியினரும் கேள்வி எழுப்பி தங்கள் கருத்தை பதிவு செய்தனர். குறிப்பாக, பல்வேறு போராட்டங்களை பா.ஜ.க முன்னெடுத்தது. அ.தி.மு.க மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்களும் இந்த விவகாரம் தொடர்பாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இந்நிலையில், இன்று நடைபெறும் சட்டப்பேரவை அமர்வில் கலந்து கொள்ளும் அ.தி.மு.க உறுப்பினர்கள், டாஸ்மாக் முறைகேடு குறித்து கவனம் ஈர்க்கும் விதமாக 'அந்த தியாகி யார்?' என்று எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்திருந்தனர். இந்த செயல் அரசியல் களத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/admk-mlas-wears-badge-to-seek-attention-towards-tasmac-issue-8933848