/indian-express-tamil/media/media_files/2026/06/09/india-defense-budget-2025-india-pakistan-nuclear-weapons-stockpile-top-military-spenders-in-the-world-2026-06-09-21-36-06.jpg)
உலகளவில் அதிகரிக்கும் அணு ஆயுதக் குவிப்பு: இந்தியா, பாகிஸ்தான் வசம் எவ்வளவு ஆயுதங்கள்? அதிர வைக்கும் புதிய தகவல்
ஸ்வீடனைச் சேர்ந்த சிப்ரி (SIPRI) என்ற சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் தனது 2026 ஆம் ஆண்டுக்கான புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. உலக நாடுகளின் ராணுவச் செலவுகள், அணு ஆயுதக் குவிப்பு மற்றும் புதிய பாதுகாப்பு சவால்கள் குறித்து இந்த அறிக்கை விரிவாகப் பேசுகிறது.
2025 ஆம் ஆண்டில் உலக நாடுகள் அனைத்தும் தங்களது ராணுவத்திற்காகச் செய்த ஒட்டுமொத்த செலவு வரலாறு காணாத வகையில் 2.9 டிரில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இது உலக நாடுகளின் மொத்தப் பொருளாதார உற்பத்தியில் 2.5 சதவீதத்திற்குச் சமம் ஆகும். உலகளாவிய ராணுவச் செலவுகள் தொடர்ந்து 11-வது ஆண்டாக அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் அமெரிக்கா அதிகபட்சமாக 954 பில்லியன் டாலர் செலவழித்துள்ளது. இது 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 7.5 சதவீதம் குறைவு என்றாலும், உலக இராணுவச் செலவில் இது தோராயமாக மூன்றில் ஒரு பங்காகும். சீனா 336 பில்லியன் டாலருடன் இரண்டாம் இடத்திலும், ரஷ்யா 190 பில்லியன் டாலருடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. இதைத் தொடர்ந்து ஜெர்மனியும் உள்ளன.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, 2025-இல் இராணுவத்திற்கு அதிக செலவு செய்த 15 பெரிய நாடுகள், உலக இராணுவச் செலவில் 80 சதவீதத்திற்கு (2,304 பில்லியன் டாலர்) காரணமாக இருந்துள்ளன. இதில் பல நாடுகள் காசா மற்றும் உக்ரைன் போர்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்டுள்ளன” என்று சிப்ரி தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ராணுவ பட்ஜெட் அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டில் இந்தியா தனது ராணுவத்திற்காக 92.1 பில்லியன் டாலர்களைச் (சுமார் 92 பில்லியன் டாலர்) செலவிட்டு உலக அளவில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 8.9 சதவீதம் அதிகமாகும்.
மேலும், 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில், உலகிலேயே அதிக அளவில் ஆயுதங்களை வாங்கிய (இறக்குமதி செய்த) ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகத் திகழ்கிறது. இந்தியாவுடன் உக்ரைன், சவூதி அரேபியா, கத்தார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் உள்ளன. உலகின் ஒட்டுமொத்த ஆயுத இறக்குமதியில் இந்த ஐந்து நாடுகள் மட்டுமே 35 சதவீதப் பங்கைக் கொண்டுள்ளன.
இந்தியா-பாகிஸ்தான் மோதல் மற்றும் சைபர் போர்த் தந்திரங்கள்
2025 மே மாதத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட கடுமையான ராணுவ மோதலை, இந்த ஆண்டின் மிக ஆபத்தான நிகழ்வுகளில் ஒன்றாக சிப்ரி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. ”அணு ஆயுதத் தொடர்பு கொண்டதாகக் கருதப்படும் பாகிஸ்தானின் விமான மற்றும் ஏவுகணை தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. எனினும், இரு நாடுகளும் நிலைமை மேலும் மோசமடையாமல் தடுக்க நடவடிக்கை எடுத்தன.
மிக முக்கியமாக, இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு ஆயுத மோதலின் ஒரு பகுதியாக முதன்முறையாக "சைபர் தாக்குதல்களை" வெளிப்படையாகப் பயன்படுத்தின. அந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளின் காலவரிசையில், மே 7-10 தேதிகளில்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே எல்லை தாண்டிய கடுமையான துப்பாக்கிச் சூடு நடந்தது" என்று சிப்ரி பதிவு செய்துள்ளது
அணு ஆயுதக் குவிப்பு நிலவரம்
2026 ஜனவரி மாத நிலவரப்படி, இரு நாடுகளின் அணு ஆயுத இருப்பு விபரம்:
*இந்தியா: சுமார் 190 அணு ஆயுதங்கள்
*பாகிஸ்தான்: சுமார் 170 அணு ஆயுதங்கள்
இந்தியா 2025-ஆம் ஆண்டில் தனது அணுஆயுதக் குவியலைச் சற்றே அதிகரித்துள்ளதாக நம்பப்படுகிறது.
”சீனா முழுவதையும் இலக்கு வைக்கும் வகையிலான நீண்ட தூர ஏவுகணைகளை உருவாக்குவதிலும், நவீனப்படுத்துவதிலும் இந்தியா தற்போது கவனம் செலுத்தி வருகிறது. அதே நேரத்தில், பாகிஸ்தானுடனான இந்தியாவின் நீண்டகாலப் பகைமையையும் மையமாகக் கொண்டே திட்டமிடல் தொடர்கிறது.
பாகிஸ்தானும் புதிய ஏவுகணை அமைப்புகளை உருவாக்கி, தனது அணு ஆயுத இருப்பை அடுத்த பத்தாண்டுகளில் மேலும் அதிகரிக்கத் திட்டமிட்டு வருகிறது.
ஒட்டுமொத்தமாக, 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய ஒன்பது நாடுகள் சேர்ந்து சுமார் 12,187 அணுஆயுதங்களைக் கொண்டிருந்தன. உலகில் உள்ள ஒட்டுமொத்த அணுஆயுதங்களின் எண்ணிக்கை மெதுவாகக் குறைந்து வந்தாலும், அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்களின் பழைய, ஓய்வுபெற்ற ஆயுதங்களை அகற்றி வருவதாலேயே இந்த எண்ணிக்கை குறைகிறது.
தவறான கணக்கீடுகள் மற்றும் மோதல்கள் தீவிரமடைவதற்கான அபாயங்கள் அதிகரித்து வரும் போதிலும், நாடுகள் தங்களின் தேசிய அதிகாரத்தின் கருவிகளாக அணுஆயுதங்களை அதிகமாகச் சார்ந்து இருக்கின்றன என்பதே 'சிப்ரி இயர்புக் 2026'-இன் முக்கிய கண்டுபிடிப்புகள் ஆகும். இது அணுஆயுதங்களின் எண்ணிக்கை மற்றும் பங்கை குறைப்பதற்காகப் பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை தலைகீழாக மாற்றுகிறது," என்று சிப்ரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
source https://tamil.indianexpress.com/india/india-defense-budget-2025-india-pakistan-nuclear-weapons-stockpile-top-military-spenders-in-the-world-12019473





