செவ்வாய், 9 ஜூன், 2026

லஞ்சம், ஊழலுக்கு எதிராக புகார் அளிக்க புதிய இணையதளம்

 

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள விஜயின் த.வெ.க அரசு ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், த.வெ.க ஆதரவாளரான தீபக் சிவக்குமார் என்பவர், தமிழகத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் குறித்து புகார் அளிக்க மக்கள் சாட்சி என்ற புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளார். 

இது குறித்து சவுத் ஃபர்ஸ்ட் தளத்தில் வெளியாகியுள்ள தகவலின்படி, தமிழக முதல்வர் விஜய்யின் தீவிர ஆதரவாளராகத் தன்னை அறிவித்துக் கொண்ட மென்பொருள் பொறியாளரான தீபக் சிவகுமார் 'மக்கள் சாட்சி' என்ற குடிமக்களால் நடத்தப்படும் ஊழல் எதிர்ப்பு இணையதளத்தை தொடங்கியுள்ளார். தற்போது தமிழகம் முழுவதும் இந்த இணையதளம் வேகமாக கவனத்தை ஈர்த்து வருகிறது. அரசுத் துறைகளில் நடக்கும் லஞ்சம் மற்றும் ஊழல் சம்பவங்களை குடிமக்கள் தங்கள் பெயர் குறிப்பிடாமல் புகாரளிக்க இந்தத் தளம் வழிவகை செய்கிறது.

கடந்த மே 10-ஆம் தேதி த.வெ.க தலைவர் விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற உடனேயே தமக்கு இந்த யோசனை தோன்றியதாக கூறியுள்ள தீபக் சிவக்குமார், ஆரம்பத்தில், டாஸ்மாக் மதுபானக் கடைகளில் நடக்கும் 'ஊழலை' வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்காகவே பிரத்யேகமாக ஒரு தளத்தை உருவாக்கி, மே 27 அன்று அதைத் தொடங்கினார். அந்த தளம் தொடங்கிய 11 நாட்களில் 300-க்கு மேற்பட்ட புகார்கள் வந்ததாகவும், இதில் பெரும்பாலான புகார்கள், டாஸ்மாக் ஊழியர்கள் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ10 வசூலிப்பது தொடர்பாக இருந்துள்ளது.

ஒரே ஒரு துறையிலிருந்து வந்த புகார்களின் எண்ணிக்கையைப் பார்த்த பிறகு, தமிழ்நாட்டின் மற்ற துறைகளிலும் லஞ்சம் மற்றும் ஊழலின் அளவு எந்த அளவுக்கு இருக்கலாம் என்று நான் யோசிக்கத் தொடங்கினேன். இதுவே, இறுதியில் பல்வேறு அரசுத் துறைகளையும் உள்ளடக்கிய, 'மக்கள் சாட்சி' என்ற பெயரிலான முழுமையான லஞ்ச ஒழிப்புத் தளமாக இந்த முயற்சியை விரிவுபடுத்த அவருக்கு வழிவகுத்தது என்று என்று சிவகுமார் சவுத் ஃபர்ஸ்ட் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

பெரிய ஆராய்ச்சிக்குப் பிறகு இந்த இணையதளத்தைத் தனி ஆளாக உருவாக்கிய தீபக் சிவகுமார், தற்போது லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக 75 பிரிவுகள் இந்தத் தளத்தில் உள்ளதாகக் கூறினார். குடிமக்கள் சேவைக்கான லஞ்ச புகார்கள், காவல்துறை மற்றும் சட்ட அமலாக்கத்துறையில் உள்ள ஊழல், வருவாய், நிலம் மற்றும் பதிவுத்துறையில் உள்ள ஊழல், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஊழல், பொதுப் பயன்பாடுகள் மற்றும் பொதுச் சேவைகளுக்கான லஞ்சம் உள்ளிட்ட பல துறைகளில் நடக்கும் ஊழல் குறித்து புகார் அளிக்கலாம்.

பொதுமக்கள் தங்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இந்த இணையதளத்தில் புகார்களைச் சமர்ப்பிக்கலாம்; இருப்பினும், சில பயனர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களின் அடையாளங்களை வெளிப்படுத்த விரும்புவதாகவும் கூறியுள்ள அவர், இந்த இணையதளம் தொடங்கி 11 நாட்களில் 140-க்கு மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாகவும், இதில் குறிப்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் நிலப் பதிவு செயல்முறைகளுடன் தொடர்புடைய அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள் உட்பட, பதிவுத்துறையில் நடக்கும் லஞ்சம் குறித்தே பெரும்பாலான புகார்கள் வந்ததாக சிவகுமார் கூறினார்.

இதற்கு அடுத்தபடியாக மின்சாரத் துறை தொடர்பான புகார்கள் அதிகமாக உள்ளன, குறிப்பாக மீட்டர் மாற்றம் மற்றும் புதிய மின் இணைப்புகளுக்கு லஞ்சம் கோரப்படுவதாகப் புகார்கள் வந்துள்ளன. காவல் துறையில் நடக்கும் லஞ்சம் குறித்தும் பல புகார்களைப் பெற்றுள்ளோம்," என்று அவர் கூறினார். மக்கள் சாட்சி தளத்தில் பதிவிடப்பட்ட சமீபத்திய புகார் ஒன்றின் மீது காவல்துறை விரைவான நடவடிக்கை எடுத்ததாக சிவகுமார் தெரிவித்தார்.

ஜூன் 6 அன்று, மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு மோசடி வழக்கு குறித்த புகாரைப் பெற்றோம். மோசடியில் இழந்த பணத்தை மீட்டெடுக்க உதவும் போது, காவல்துறை பணியாளர்கள் லஞ்சம் கேட்டதாகப் புகார்தாரர் குற்றம் சாட்டியிருந்தார். பின்னர் அந்தப் புகாரை, தமிழ்நாடு காவல்துறையைக் குறியிட்டு (Tag செய்து) எக்ஸ் (X) தளத்தில் பகிரங்கமாகப் பதிவிட்டதை தொடர்ந்து. எழுத்துப்பூர்வமாகப் புகாரைப் பெற்று, காவல்துறையினர் பணத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர் என்று கூறியுள்ளார். 

அதேபோல் தாம் அரசுடன் இணைந்தவர் அல்ல என்பதால், இந்தத் தளம் பயனர்களின் முக்கியமான தகவல்களையோ அல்லது புகார்தாரர்களின் தனிப்பட்ட விவரங்களையோ நிரந்தரமாகச் சேமித்து வைப்பதில்லை. தற்போது மக்கள் சாட்சி தளம் மூலம் வரும் புகார்களின் தன்மைகளை ஆராய்ந்து வருவதாகவும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பரந்த ஊழல் போக்குகளைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளை ஒருங்கிணைக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

அதிக அளவிலான புகார்கள் சேகரிக்கப்பட்ட பிறகு, பல்வேறு துறைகளில் லஞ்சம் மற்றும் ஊழல் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அந்தப் போக்குகளை முறையாக வெளிப்படுத்த நான் ஏஐ (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த விரும்புகிறேன். மக்கள் சாட்சி தளத்தை அதிகாரப்பூர்வ ஊழல் எதிர்ப்பு அமைப்பாக மாற்றும் முயற்சியில், தவெக எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அரசுப் பிரதிநிதிகளை அணுகி வருகிறேன். அரசு இதை ஒரு முன்னோடி முயற்சியாக முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என்று தான் விரும்புவதாக கூறியுள்ளார். 


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-tvk-supporter-launch-new-website-for-anti-bribery-in-tamil-12016450

லஞ்சம், ஊழலுக்கு எதிராக புகார் அளிக்க புதிய இணையதளம்