ஞாயிறு, 7 ஜூன், 2026

இனி சார்பதிவாளர் அலுவலகம் போகத் தேவையில்லை; 'வருகை இல்லா ஆவணப் பதிவு' அமல்: பதிவுத்துறை அறிவிப்பு

 sub registrar office 2 rep

முதற்கட்டமாக மனை, புதிய பிளாட்டுகள் மற்றும் வங்கி ஆவணங்களுக்குப் பொருந்தும் இத்திட்டத்திற்கான ஆதார் சரிபார்ப்பு மற்றும் தொழில்நுட்ப நெறிமுறைகளைப் பதிவுத்துறைத் தலைவர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். Photograph: (Representational Image)

பொதுமக்களின் அலைச்சலைக் குறைக்கும் நோக்கில், வீடுகளில் இருந்தபடியே 24 மணி நேரமும் ஆன்லைனில் பத்திரப் பதிவு செய்யும் 'வருகை இல்லா ஆவணப் பதிவு' முறையைத் தமிழக அரசு கட்டாயமாக்க உள்ளது. முதற்கட்டமாக மனை, புதிய பிளாட்டுகள் மற்றும் வங்கி ஆவணங்களுக்குப் பொருந்தும் இத்திட்டத்திற்கான ஆதார் சரிபார்ப்பு மற்றும் தொழில்நுட்ப நெறிமுறைகளைப் பதிவுத்துறைத் தலைவர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசின் பதிவுத்துறைத் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, ஆவணப் பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்தும் நோக்கில், பொதுமக்கள் தங்களது இடத்திலிருந்தே நேரடியாக இணையவழியே ஆவணப் பதிவு செய்யும் "வருகை இல்லா ஆவணப் பதிவு" முறையைப் பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய ஆவணப் பதிவு முறையின் மூலம் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், 24 மணி நேரமும் எவ்வித நேரக் கட்டுப்பாடும் இன்றி (24X7X365) எங்குயிருந்தும் இணையதளத்தின் மூலம் தங்களது ஆவணங்களைப் பதிவு செய்து கொள்ள முடியும். இவ்வாறு ஆவணப் பதிவிற்குச் சார்பதிவாளர் ஒப்புதல் அளித்ததும், அவரது மின்னணு கையொப்பத்துடன் கூடிய ஆவணம் சம்பந்தப்பட்ட நபரின் இணையப் பக்க உள்நுழைவிற்கும் (Login) மற்றும் அலைபேசிக்கு வாட்ஸ்அப் (Whatsapp) மூலமும் அனுப்பி வைக்கப்படும். இந்த ஆவணத்தை ஆவணதாரர்கள் தங்களது உள்நுழைவு வழியே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த "வருகை இல்லா ஆவணப் பதிவு" நடைமுறை விரைவில் கட்டாயமாக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு அதற்கான நெறிமுறைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, சார்பதிவாளர் அலுவலகம் வராமலேயே பதிவு செய்யக்கூடிய ஆவணங்களாக, முதல் விற்பனை மனை (First sale of Plot), முதல் விற்பனை அடுக்குமாடி குடியிருப்பு (First sale of Flat), தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய விற்பனை ஆவணங்கள் மற்றும் வங்கிகளில் பெறும் கடனுக்கான அடமானம் மற்றும் இரசீது ஆவணங்கள் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள், கட்டுமான நிறுவனங்கள், ஆவண எழுத்தர்கள் மற்றும் வங்கிகள், வழக்கறிஞர்கள் ஆகியோர் இத்திட்டத்தைப் பயன்படுத்தப் பதிவுத்துறை இணையதளத்தில் தங்களது உள்நுழைவினை தாங்களாகவே உருவாக்கி ஆவணங்களை (இரசீது) இணையவழியில் சமர்ப்பிக்கலாம். மேலும், ஆவணத்தை எழுதிக் கொடுப்பவர்கள், எழுதிப் பெறுபவர்கள் மற்றும் சாட்சிகள் ஆகிய அனைவரும் தங்களது ஆதார் அட்டையை இணையதளத்தில் மேலேற்றம் செய்ய வேண்டும். தொடர்ந்து, ஆதார் ஆணையத்தின் மூலம் கைரேகை அல்லது கருவிழிப் படலம் வழி ஆதார் சரிபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதற்கான தொழில்நுட்பத் தேவைகளாக, தடையற்ற இணைய இணைப்பு, UIDAI அங்கீகரிக்கப்பட்ட எல்1 (L1) வகை விரல் ரேகை இயந்திரம் மற்றும் கருவிழிப்படலம் கவரும் கருவி, அதோடு புகைப்படக் கருவி (Webcam) ஆகியவை அவசியமாகும். மேலும், இத்திட்டம் தொடர்பான சந்தேகங்களுக்குத் தொடர்பு கொள்ள டி.சி.எஸ் (TCS) நிறுவனத்தின் தொழில்நுட்ப அலுவலர்களின் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி வன்பொருள் (Hardware) சார்ந்த சந்தேகங்களுக்குத் திரு.முகமது யூனுஸ் (7397574067) மற்றும் திரு.அருண்குமார் (9940446694) ஆகியோரையும், மென்பொருள் (Software) சார்ந்த சந்தேகங்களுக்குத் திரு.சீனிவாஸ் கணேஷ் (6369798973) மற்றும் திரு.டில்லி பாபு (8525805957) ஆகியோரையும் தொடர்பு கொள்ளலாம் எனப் பதிவுத்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.



source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-registration-department-anywhere-registration-mandatory-guidelines-sub-registrar-online-12010769