அமெரிக்காவில் தங்கிப் பணியாற்றுவதற்காக, குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்ற வெளிநாட்டுத் திறமையாளர்களுக்கு வழங்கப்படும் தற்காலிகப் பணி அனுமதிதான் ஹெச் -1பி விசா ஆகும். 1990-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விசா மூலம் ஒரு நபர் அமெரிக்காவில் 3 ஆண்டுகள் வரை சட்டப்பூர்வமாக வேலை செய்ய முடியும். இதற்கான டிமாண்ட் சர்வதேச அளவில் அதிகமாக இருப்பதால், 'கம்ப்யூட்டர் குலுக்கல்' முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர்.
ஆனால், அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த விசாவுக்கான கட்டணத்தை அதிரடியாக 1 லட்சம் டாலராக, இந்திய மதிப்பில் சுமார் ரூ.84 லட்சம் முதல் ரூ. 96 லட்சம் வரை உயர்த்தி உத்தரவிட்டார். அத்துடன், வெளிநாட்டவர்கள் உள்ளே வருவதைக் கட்டுப்படுத்த விசா தேர்வு முறைகளிலும் பல்வேறு கடுமையான மாற்றங்களைக் கொண்டு வந்தார்.
கட்டண உயர்வால் ஏற்பட்ட பாதிப்பு
டிரம்பின் இந்த அறிவிப்புக்கு முன்பு வரை, வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த விரும்பிய அமெரிக்க நிறுவனங்கள் விசா கட்டணமாகப் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் $2,000 முதல் $5,000 வரை மட்டுமே செலுத்தி வந்தன. இதையடுத்து, விசா கட்டணம் ஒரே அடியாக 1 லட்சம் டாலராக உயர்த்தப்பட்டதால், நிறுவனங்கள் புதிய ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கத் தயங்கின. இதனால் விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கை மிகக் கடுமையாகச் சரிந்தது. பிப்ரவரி 15-ஆம் தேதி நிலவரப்படி, வெறும் 85 பேர் மட்டுமே இந்த புதிய கட்டணத்தைச் செலுத்தியிருந்ததாக அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
நீதிமன்றம் கருத்து
இந்த அதிரடி கட்டண உயர்வை எதிர்த்து, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மாநில அரசு வழக்கறிஞர்கள் 20 பேர்
நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்நிலையில், ஹெச் - 1பி விசாக்களுக்கான புதிய கட்டணத்தை அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. மேலும், நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி விதிக்கப்பட்ட இந்தக் கட்டணம் சட்டவிரோதமான வரி என்று பாஸ்டன் நகரின் மாவட்ட நீதிபதியான லியோ சொரோகின் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/international/donald-trumps-h-1b-visa-fee-is-unlawful-us-judge-rules-read-full-story-12016421





