/indian-express-tamil/media/media_files/2026/06/09/nellai-meyar-2026-06-09-07-48-16.jpg)
தமிழகத்தில் த.வெ.க தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவு பெற்றிருந்தாலும், அரசியலில், எதிர்கட்சிகள் சார்பில் அவர் மீதான விமர்சனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தி.மு.க. தரப்பில் இருந்து விஜய் சினிமா கவர்ச்சியில் வெற்றி பெற்றுவிட்டார், இந்த ஆட்சி 3 மாதங்கள் கூட நீடிக்காது என்று கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து வருகின்றனர்.
மறுபக்கம், சென்னையில் மேயர் பிரியா த.வெ.க எம்.எல்.ஏ-வை குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சியில் அவமதித்துவிட்டார் என்ற சர்ச்சை எழுந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி அலுவலகங்கள் சிலவற்றில் புதிதாக ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெறும்போது, அரசு அலுவலகங்களில் முதல்வரின் புகைப்படங்கள் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் சில மாநகராட்சிகளில், தற்போதைய முதல்வர் விஜயின் புகைப்படம் இருக்க கூடாது என்று மேயர்கள் கூறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே சமயம், அரசாணையின்படி முதல்வரின் புகைப்படம் இருக்க வேண்டும் என்று த.வெ.கவினர் கூறியதை தொடர்ந்து முதல்வர் விஜயின் புகைப்படத்தை வைக்க மறுத்த சில மாநகராட்சிகளில், அவரின் புகைப்படத்தை வைக்க ஒப்புக்கொண்ட நிலையில், முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் புகைப்படமும் இருக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. அந்த வகையில் தற்போது திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் நாற்காலி இந்த அரசயில் சர்ச்சைக்கு பெரிய பிரச்னையை உருவாக்கியுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில், முதல்வர் விஜய்யின் புகைப்படத்தை மேயரின் இருக்கைக்கு நேர் மேலே வைக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், வற்புறுத்தியதை அடுத்து, மேயர் ஜி.ராமகிருஷ்ணன் அந்த நாற்காலியில் அமர மறுத்துவிட்டார். அதற்குப் பதிலாக, மேயர் நாற்காலிக்கு அருகில் இருந்த சோபாவிற்கு மாறி தனது அலுவலகப் பணிகளை செய்துள்ளார். அரசு அலுவலகங்களில் விஜய்யின் புகைப்படம் வைக்கப்படுவது தொடர்பாக தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் எழுந்துள்ள தொடர் சர்ச்சைகளில் இந்தச் சம்பவம் மிகச் சமீபத்தியதாகும்.
அரசியல் காரணங்களுக்காகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும் பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றனர். இது எங்கள் பணியையும், மக்களுக்குச் சேவை செய்யும் எங்கள் திறனையும் பாதிக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு, எனது அறை உட்பட மாநகராட்சி அலுவலகத்தின் அனைத்து அறைகளிலும் தங்களது தலைவரின் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று த.வெ.க நிர்வாகிகள் கூறினர். நாங்களும் அதற்கு ஒப்புக்கொண்டு அவரது புகைப்படத்தை வைத்தோம். இப்போது, அதை அறையின் மையப்பகுதியில், எனது நாற்காலிக்கு நேர் மேலே வைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்," என்று ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த சர்ச்சை முதன்முதலில் எழுந்தபோது, ராமகிருஷ்ணன் தி.மு.க தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் சிறிய புகைப்படம் ஒன்றை தனது மேஜையின் மீது வைத்து தனது எதிர்ப்பைக் காட்டினார், மேலும் கவுன்சில் கூட்டத்தின் நடவடிக்கைகளையும் தொடர்ந்தார்.
இதே நிலை கோவை மாநகராட்சியிலும் தொடர்ந்து வருகிறது. மேயர் ஆர். ரங்கநாயகி கூறுகையில், "அவர்கள் அனைத்து அறைகளிலும் அவரது புகைப்படத்தை வைத்துள்ளனர். ஆனால் மாநகராட்சியால் எனக்கு ஒதுக்கப்பட்ட எனது தனிப்பட்ட அறையில் அதை வைப்பதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். பின்னர், அவர்கள் அரசாணையை சுட்டிக்காட்டியதால், அதை வைக்க நாங்கள் ஒப்புக்கொண்டோம். இருப்பினும், எங்கள் தலைவர் ஸ்டாலினின் புகைப்படத்தை மாற்றுவதற்கு நாங்கள் மறுத்துவிட்டோம் என்று கூறியுள்ளார்.
அதேபோல் கரூரிலும் விஜய் புகைப்படத்தின் அருகே ஸ்டாலினின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் என்று திமுக கவுன்சிலர்கள் கோரினர். இதற்கு அதிமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் கே.காமராஜ் ஆகியோரின் புகைப்படங்களை ஏந்தி வந்து, தங்களது தலைவர்களுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதேபோல், குன்னூரில், விஜய்யின் புகைப்படத்துடன் வைக்கப்பட்டிருந்த ஸ்டாலின் மற்றும் பழனிசாமியின் புகைப்படங்கள், நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் த.வெ.க தொண்டர்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து அகற்றப்பட்டன. இதனால் மோதல்களைத் தவிர்க்க நகராட்சி அலுவலகத்தில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-nellai-meyar-office-vijay-and-stalin-photo-controversy-update-in-tamil-12016361





