/indian-express-tamil/media/media_files/2025/12/24/nurses-2-2025-12-24-07-26-45.jpg)
கோவையில் எம்.ஆர்.பி தொகுப்பூதிய செவிலியர்கள் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் 6 நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறிய தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், எம்.ஆர்.பி செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட செவிலியர்கள் கைது செய்யபட்டது பெரும் கண்டனங்களுக்கும் உள்ளானதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் எம்.ஆர்.பி செவிலியர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அதன்படி கோவையிலும் எம்.ஆர்.பி தொகுப்பூதிய செவிலியர்கள் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் 6 நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். நாள் தோறும் இரவு பனியையும் பொருட்படுத்தாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில செவிலியர்கள் அவர்களது குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/12/24/nurses-protest-2-2025-12-24-07-28-40.jpeg)
இந்நிலையில் 6 வது நாளான இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள செவிலியர்கள் சிலர் கைகளை கருப்பு துணியால் கட்டி கொண்டும், சிலர் கண்ணை கருப்பு துணியால் கட்டி கொண்டும் காத்திருப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை தங்கள் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் தொடர்ந்து இந்த காத்திருப்பு போராட்டத்தை நடத்துவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்
source https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-nurses-protest-covering-their-hands-and-eyes-with-black-cloth-they-demand-permanent-employment-10942330





