புதன், 31 டிசம்பர், 2025

ஜாக்டோ- ஜியோ போராட்டம் தொடங்குகிற அதே நாளில் அமைச்சரவை கூட்டம்: பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி தமிழக அரசு முக்கிய முடிவு?

 tamilnadu secretariat

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வரும் ஜனவரி 6-ஆம் தேதி காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. 2026-ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

தமிழக சட்டப்பேரவையின் 2026 ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 20-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக நடைபெறும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சில முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது. 

சட்டசபையில் ஆளுநர் வாசிக்க வேண்டிய உரையின் வரைவு அறிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல், தேர்தல் நெருங்கும் சூழலில், அரசின் இடைக்கால வரவு-செலவுத் திட்டம் (Interim Budget) தொடர்பான ஆலோசனைகள், தமிழகத்தில் வேலைவாய்ப்பைப் பெருக்கும் நோக்கில், புதிய தொழில் திட்டங்கள் மற்றும் பெரும் முதலீடுகள் குறித்து விவாதிக்கப்படலாம். 

அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் அதே ஜனவரி 6-ஆம் தேதி, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ (JACTTO-GEO) தங்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது. 

அரசு ஊழியர்கள் போராட்டக்களத்தில் இறங்கும் அதே நாளில் அமைச்சரவை கூடுவதால், அவர்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வர் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நீண்ட கால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக ஏதேனும் சாதகமான அறிவிப்பு வெளியாகுமா என்பதே அரசு ஊழியர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

சட்டமன்றக் கூட்டத்தொடர் மற்றும் அரசு ஊழியர்களின் போராட்டம் என இருமுனை அழுத்தங்களுக்கு மத்தியில் இந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழக அரசின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் புதிய நலத்திட்டங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஜனவரி 6 மாலை தெரியவரும்.



source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-cabinet-meet-on-jan-6-expecting-crucial-decisions-on-jactto-geo-strike-10960474