செவ்வாய், 23 டிசம்பர், 2025

கெடு வைத்த ஸ்டாலின்: பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ, குத்தம்பாக்கம் பஸ் நிலையம் இந்த மாதத்திற்குள் முடிக்க உத்தரவு

 

mk stalin

தமிழ்நாடு அரசின் முத்திரை திட்டம் 155 திட்டங்களுடன் தொடங்கப்பட்டு தற்போது 24 துறைகளைச் சேர்ந்த 288 திட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில் 87 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நடைபெறும் 27 திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் சிவகங்கை, மதுரை, நாகை, திருவாரூர், ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் கூட்டு குடிநீர் திட்டங்களை விரைந்து முடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

மேலும், மதுரை வண்டியூர் ஏரி மேம்பாட்டு திட்டத்தையும், குத்தம்பாக்கம் மற்றும் செங்கல்பட்டு பேருந்து நிலையப் பணிகளையும் விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவும் ஆணையிட்டார். கிளாம்பாக்கத்தில் கலைஞர் பேருந்து முனையத்திலிருந்து சாலையை கடப்பதற்கான வான்வழி நடைப்பாதையை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார். அதுமட்டுமல்லாமல், பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ பணிகளை முடித்து வருகிற பிப்ரவரி மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

ஆறு துறைகளால் ரூ.87,941 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் 27 முக்கிய திட்டங்களும் ஜனவரி மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் என். முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/finish-poonamallee-vadapalani-metro-stretch-by-february-cm-mk-stalin-order-10939428