டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டில் மிகப்பெரிய அசம்பாவிதத்தைத் தவிர்க்கும் வகையில் 3,000 கிலோ (3 டன்) வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் தேசிய புலனாய்வு முகமை ஏற்பாடு செய்திருந்த ‘பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு-2025’ ஐத் தொடங்கி வைத்து பேசிய அவர், பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
கடந்த நவம்பர் 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 40 கிலோ வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து பேசிய அமித்ஷா, டெல்லியில் 40 கிலோ வெடிபொருட்கள் வெடித்தன, ஆனால் பாதுகாப்பு படையினரின் துரித நடவடிக்கையால் 3 டன் வெடிபொருட்கள் வெடிப்பதற்கு முன்பே மீட்கப்பட்டன. இந்த சதித்திட்டத்தில் தொடர்புடைய ஒட்டுமொத்த நெட்வொர்க்கையும் நமது அதிகாரிகள் முன்னதாகவே கண்டறிந்து கைது செய்தனர் என்று பாராட்டினார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
காஷ்மீரின் சுற்றுலா வளர்ச்சியைச் சீர்குலைக்கத் திட்டமிட்ட பயங்கரவாதிகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் 2 முக்கிய ஆபரேஷன்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். பயங்கரவாத தாக்குதலுக்குத் திட்டமிட்ட மூளையாக செயல்பட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்துார் மூலம் பதிலடியும், ஆயுதங்களுடன் களத்தில் இறங்கிய பயங்கரவாதிகளுக்கு ஆபரேஷன் மகாதேவ் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டது. பஹல்காம் தாக்குதல் குறித்த விசாரணை உலக நாடுகளுக்கு ஒரு பாடமாக அமையும். இந்த விசாரணை முடிவுகள் சர்வதேச அரங்கில் பாகிஸ்தானைக் கூண்டில் நிறுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.
இந்த மாநாட்டில் 3 முக்கியமான டிஜிட்டல் தளங்களை அமித் ஷா அறிமுகப்படுத்தினார். புலனாய்வு அதிகாரிகளுக்கான புதிய வழிகாட்டியான என்.ஐ.ஏ. குற்ற கையேடு, ஒருங்கிணைந்த குற்றக் கும்பல்களைக் கண்காணிக்க குற்ற நெட்வொர்க் டேட்டா தளம், காணாமல் போன மற்றும் மீட்கப்பட்ட ஆயுதங்களைத் துல்லியமாகக் கண்டறிய ஆயுதத் தரவுத்தளம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார்.
வெளிநாடுகளுக்குத் தப்பியோடும் குற்றவாளிகளைக் குறிவைத்து "Trial-in-Absentia" (குற்றவாளி இல்லாத நிலையில் விசாரணை நடத்துதல்) முறையைத் தீவிரப்படுத்த மாநிலக் காவல்துறை தலைவர்களுக்கு (DGs) அமைச்சர் உத்தரவிட்டார். இதன் மூலம் அவர்கள் இந்தியா திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று அவர் கூறினார்.
இந்தியா உலகின் 4-வது பெரிய பொருளாதாரமாக வளர்ந்து வரும் வேளையில், எல்லைத் பாதுகாப்பு மட்டுமின்றி சைபர் போர் (Cyber Warfare) மற்றும் ஹைப்ரிட் பயங்கரவாதம் போன்ற சவால்களை எதிர்கொள்ளப் பல அடுக்கு பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.
source https://tamil.indianexpress.com/india/40-kg-of-explosives-used-in-red-fort-blast-how-indian-agencies-foiled-a-massive-terror-plot-in-delhi-amit-shah-10949682





