/indian-express-tamil/media/media_files/2025/12/27/sand-mining-2025-12-27-09-20-15.jpg)
தமிழ்நாட்டில் மணல் கொள்ளை குறித்த நிபுணர்களின் அறிக்கை சட்டவிரோதமானது என்ற மாநில அரசின் குற்றச்சாட்டுகளை அமலாக்கதுறை மறுத்துள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து அமலாக்கத் துறை மறுமொழி (rejoinder) ஒன்றை தாக்கல் செய்துள்ளது என்று கூறப்படுகிறது.
இது குறித்து தி இந்து வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் ஆற்றுப் படுகைகளில் மணல் அள்ளுவதில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இதனால் அரசு கருவூலத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 2023-ம் ஆண்டு அக்டோபர்-நவம்பர் காலகட்டத்தில் 28 குவாரிகளில் எடுக்கப்பட்ட மணலின் அளவை மதிப்பீடு செய்ய ஐஐடி-கான்பூரை அமலாக்கத் துறை நியமித்தது.
இந்த ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி மணல் அள்ளப்பட்டதால் கடந்த சில ஆண்டுகளில் ரூ4,730 கோடி மதிப்புள்ள மணல் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்தது. ஆனால், தமிழக அரசின் கணக்கின்படி மணல் விற்பனை மூலம் ஈட்டப்பட்ட வருவாய் வெறும் ரூ36.45 கோடி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தமிழக நீர்வள ஆதாரத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர், ஐஐடி-கான்பூர் இயக்குநருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், இந்த ஆய்வை முன்னின்று நடத்திய பேராசிரியர் ராஜீவ் சின்ஹாவுக்கு இதற்கான அதிகாரம் வழங்கப்பட்டதா என்பது குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளித்த ஐஐடி-கான்பூர் இயக்குநர், ஆய்வு நடந்ததாகக் கூறப்படும் 2023-ம் ஆண்டு அக்டோபர் 7 முதல் நவம்பர் 5, வரையிலான காலப்பகுதியில், பேராசிரியர் சின்ஹாவுக்கு விடுப்பு வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். ஐஐடி விதிகளின்படி, விடுப்பில் இருக்கும்போது கூட, துறையின் முன் அனுமதி இன்றி ஒரு பணியாளர் தலைமை இடத்திலிருந்து வெளியேற அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
‘
சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலை அறிக்கையில் தமிழக அரசு, சம்பந்தப்பட்ட பேராசிரியர் ஆய்விற்காகத் தமிழகத்திற்கு வரவே இல்லை என்பதும், அவர் காகிதத்தில் மட்டுமே அறிக்கையைத் தயார் செய்துள்ளார் என்பதும் உறுதியாகியுள்ளது. எனவே இந்த அறிக்கை சட்டப்படி செல்லாது என்று தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளது. இந்த ஆய்வை உண்மையில் நடத்தியது பேராசிரியர் சின்ஹா தொடங்கிய ‘டெராக்வா பிரைவேட் லிமிடெட்’ (Terraqua Private Limited) என்ற தனியார் நிறுவனம் ஆகும்.
ஐஐடி சட்டம் 1961, பிரிவு 6(1)(1A)-ன்படி, ஒவ்வொரு ஐஐடி நிறுவனமும் அதற்கு ஒதுக்கப்பட்ட மண்டலத்திற்குள் உள்ள மாநிலங்களுக்கு மட்டுமே தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்க முடியும். கான்பூர் ஐஐடி தனது மண்டலத்தைத் தாண்டி தமிழகத்தில் ஆய்வு நடத்தியது சட்ட விதிமீறலாகும். தமிழகத்திலேயே ஐஐடி மெட்ராஸ் இருக்கும்போது, அமலாக்கத் துறை ஏன் கான்பூர் ஐஐடியின் கீழ் இயங்கும் ஒரு தனியார் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்தது என்றும் அரசு கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த ஆய்வின்போது ட்ரோன்கள் (Drones) பயன்படுத்தப்பட்டதில் ‘ட்ரோன் விதிகள் 2021’ மற்றும் முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. வான்வெளி பாதுகாப்பு விதிகளின்படி, ட்ரோன்களை இயக்குவதற்கு முன்னதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA), மாவட்ட ஆட்சியர் அல்லது காவல் கண்காணிப்பாளரிடம் எவ்வித முன் அனுமதியும் பெறப்படவில்லை என்றும் அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
ஐஐடி கான்பூர் தனது அதிகார வரம்பை மீறி செயல்பட்டதாக மாநில அரசு கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமலாக்க துறை, அதிகார வரம்பு என்பது கல்வி நிறுவனத்துக்குரியது அல்ல விசாரணை அமைப்புக்குரியது என்றது. மேலும், தனது விசாரணைக்கு ஆதரவாக நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் நிபுணர்களின் சேவையை பயன்படுத்துவதற்கு அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
மெட்ராஸ் ஐடி உதவ மறுப்பு
சட்டவிரோத மணல் கொள்ளை குற்றச்சாட்டில் மாநில அதிகாரிகள் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தால் புகழ்பெற்ற நிபுணர்கள் அமைப்பை பயன்படுத்தியதாக அமலாக்க துறை தெரிவித்துள்ளது. மேலும், அமலாக்கத் துறை இச்சம்பவம் தொடர்பாக மெட்ராஸ் ஐஐடி-யிடம் உதவி கேட்டதாகவும் அந்நிறுவனம் உதவ மறுத்ததாகவும் கூறியுள்ளது. ஆய்வின் போது ட்ரோன்கள் பறக்கவிடப்பட்டதில் விதி மீறல்கள் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்த அமலாக்கத் துறை இதுவரை அந்த விதிமீறல்கள் தொடர்பாக எந்தப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/ed-dismiss-the-allegation-sand-mining-survey-is-illegal-10950195





