/indian-express-tamil/media/media_files/2025/12/29/droupadi-murmu-madras-university-2025-12-29-22-19-55.jpg)
சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்கவும் நீக்கவும் தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட மசோதா 2022-ல் சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. ஆளுநர் அதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார்.
தமிழக சட்டமன்றத்தில் கடந்த 2022, ஏப்ரல் மாதம் சென்னைப் பல்கலைக்கழக மசோதா நிறைவேற்றப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரை நியமிக்கவும், நீக்கவும் அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இந்த மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டது. அதேபோல், பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக நிதித்துறைச் செயலரை நியமிக்கவும் இந்த மசோதா வழிவகை செய்திருந்தது.
உயர் கல்வித்துறை சார்பில் கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவை ஆளுநருக்கு தமிழக அரசு அனுப்பி வைத்த நிலையில், ஆளுநர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். மத்திய மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் உள்ள விவகாரம் என்பதால், இந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆளுநரால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழக மசோதா 3 ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது.
இந்நிலையில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்கவும் நீக்கவும் அதிகாரமளிக்கும் மசோதாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திருப்பி அனுப்பியுள்ளார். இந்த மசோதா, திருப்பி அனுப்பப்பட்ட விவரம் தமிழக சட்டத்துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த மசோதா திருப்பி அனுப்பப்பட்டுள்ள நிலையில், மேலும் பல மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. அந்த மசோதாக்களின் நிலை என்ன என்பது தற்போது தெரியவில்லை. பாரதியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழக மசோதாக்களின் நிலை ஓரிரு நாட்களில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
30 12 2025
source https://tamil.indianexpress.com/tamilnadu/president-droupadi-murmu-sent-back-madras-university-bill-tamil-nadu-assembly-10956770





