/indian-express-tamil/media/media_files/2025/12/27/rn-ravi-2025-12-27-08-37-50.jpg)
2026-ஆம் ஆண்டின் முதல் சட்ட சபை கூட்டத் தொடர் ஜனவரி 20-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். இதுதொடர்பாக, சபாநாயகர் அப்பாவு தலைமைச்செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது, "2026-ம் ஆண்டு தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஜனவரி 20-ந் தேதி கூடுகிறது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு கூடும் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று தமிழக அரசின் உரையை வாசிப்பார்.
அதனைத் தொடர்ந்து, கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு எடுக்கும்” என்றார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜனவரி 21-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. பிப்ரவரி மாதம் 2-வது வாரத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை மீண்டும் கூட உள்ளது.
இந்த கூட்டத்தில் திருவண்ணாமலை தீபம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளது. இந்த சட்டசபை கூட்டத் தொடரிலாவது ஆளுநர் ஆர்.என்.ரவி தனது முழு உரையை வாசிப்பாரா என்ற கேள்வி எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதாவது, ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டசபையின் போது தொடர்ந்து உரையை வாசிக்காமல் சென்றுள்ளார்.
விமர்சனத்திற்குள்ளான ஆர்.என்.ரவி செயல்
2024-ஆம் ஆண்டு சட்டசபையின் போது தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த ஆளுநர் உரையில் இருந்து ஒரு சில பகுதிகளை நீக்கிவிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசித்தார். இதையடுத்து, 2025-ஆம் ஆண்டு தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக கூறி சட்டசபைக்கு வந்த வேகத்தில் வெளிநடப்பு செய்தார். ஆளுநரின் இந்த செயல்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. இந்நிலையில், 2026-ஆம் ஆண்டு சட்ட சபை கூட்டத் தொடரின் போது ஆளுநர் தன் உரையை முழுமையாக வாசிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
26 12 2025
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-assembly-session-all-eyes-on-governor-rn-ravi-10950144





