சனி, 20 டிசம்பர், 2025

ஸ்டாலின், உதயநிதி தொகுதியில் மட்டும் 2 லட்சம்; இ.பி.எஸ் தொகுதியில் எவ்வளவு வாக்காளர்கள் நீக்கம்?

 SIR Tamilnadu Special Intensive Revision Electoral Roll Voters List Edappadi K Palaniswami CM MK Stalin Udhayanidhi Stalin Nainar Nagendran constituency wise Tamil News

பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிட்ட நெல்லை சட்டமன்றத் தொகுதி எஸ்.ஐ.ஆர்க்கு முன் 3,05,804 வாக்காளர்கள் இருந்த நிலையில், எஸ்.ஐ.ஆர் பணிகளில் 42,119 பேர் மட்டுமே நீக்கப்பட்டுள்ளனர்

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதுமான முழு பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 97,32,832 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் மட்டும் 14.25 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 1.03 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு முன்பு 2,90,653 வாக்காளர்கள் இருந்தனர். இப்போது அங்கு 1,86,841 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.

இதேபோல், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம் தொகுதியில் 89,241 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு முன்பு 2,40,087 வாக்காளர்கள் இருந்த நிலையில், இப்போது அங்கு 1,50,846 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். எதிர்க் கட்சித் தலைவரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் தொகுதியில் 26,375 பேர் நீக்கப்பட்டுள்ளனர். பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிட்ட நெல்லை சட்டமன்றத் தொகுதி எஸ்.ஐ.ஆர்க்கு முன் 3,05,804 வாக்காளர்கள் இருந்த நிலையில், எஸ்.ஐ.ஆர் பணிகளில் 42,119 பேர் மட்டுமே நீக்கப்பட்டுள்ளனர். எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குப் பிறகு அங்கு 2,63,685 வாக்காளர்கள் உள்ளனர். 

வாக்காளர் பட்டியல் பெயர் இருக்கிறதா என்பதை, voters.eci.gov.in என்ற இணையதளத்தில், வாக்காளர் அடையாள அட்டை எண்ணை Enter செய்து தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சரியான முகவரியில் இருந்தவர்களை தவிர, உயிரிழந்தவர்கள், முகவரி மாற்றியவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள் மற்றும் இரட்டை பதிவு வாக்காளர்கள், ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் இந்த பட்டியலில் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் சரியில்லை என ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் ஜனவரி 18-ம் தேதி வரை தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இடம் மாறியவர்கள் படிவம் 8, புதியதாக சேர்ப்பவர்கள் படிவம் 6 ஆகியவற்றை பூர்த்தி செய்து ஆவணங்களுடன் வழங்கி, வாக்காளர் பட்டியலில் ஜனவரி 18ஆம் தேதிக்குள் இணைத்துக் கொள்ளலாம்என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தங்களை மேற்கொள்ளவும் மேலும் ஒரு மாத கால அளவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



source https://tamil.indianexpress.com/tamilnadu/sir-tamilnadu-special-intensive-revision-electoral-roll-voters-list-edappadi-k-palaniswami-cm-mk-stalin-udhayanidhi-stalin-nainar-nagendran-constituency-wise-tamil-news-10925181