/indian-express-tamil/media/media_files/2025/12/26/screenshot-2025-12-26-103207-2025-12-26-10-32-45.jpg)
தமிழக அரசு, ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. 2004-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (Contributory Pension Scheme) அமல்படுத்தப்பட்டதையடுத்து, ஓய்வுக்கால பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளதாகவும், இந்த திட்டம் ஊழியர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருப்பதாகவும் சங்கங்கள் குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக, ஓய்வூதியம் மட்டுமின்றி, பணியாளர் மரணமடைந்தால் குடும்பத்தினருக்கு கிடைக்க வேண்டிய சமூக பாதுகாப்பு வசதிகளும் பாதிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக அரசு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற 6-ந் தேதி ஜாக்டோ–ஜியோ (JACTO-GEO) அமைப்பு அறிவித்துள்ள காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் முழுமையாக பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கவன ஈர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் பாதிப்புகளை விளக்கும் வகையில், பேரையூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணினி ஆசிரியையாக பணியாற்றிய ரோசன் கதீஜா பீவி கடந்த அக்டோபர் மாதம் திடீரென மரணமடைந்த சம்பவத்தையும் ஆசிரியர் கழகம் சுட்டிக்காட்டியுள்ளது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்ததால், அவரது மறைவுக்கு பின்னர் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. அவருடைய இரண்டு மகன்களும் கல்லூரியில் பயின்று வரும் நிலையில், குடும்பத்தின் வாழ்வாதாரம் மற்றும் குழந்தைகளின் கல்வி கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவானது.
இந்த துயரமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் பிற ஆசிரியர் சங்கங்களின் உதவியுடன் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து ரூ.3 லட்சத்து 45 ஆயிரத்து 700 தொகையை திரட்டி அவரது குடும்பத்தினருக்கு வழங்கியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாதிருக்கவும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கவும், தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது அவசியம் என சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. சமூக பாதுகாப்பு மற்றும் பணியாளர் நலனை உறுதி செய்ய அரசு விரைவான முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/government-employees-and-teachers-intensify-protest-demanding-restoration-of-old-pension-scheme-in-tamil-nadu-10947489





