/indian-express-tamil/media/media_files/2026/01/11/trump-2026-01-11-22-15-29.jpg)
வெனிசுலாவைத் தொடர்ந்து கியூபாவிற்கு ட்ரம்ப் விடுத்த கடைசி எச்சரிக்கை!
கியூபா நாட்டிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்எச்சரிக்கை விடுத்துள்ளார். கியூபா மிக விரைவில் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் அந்நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப்பின் 'ட்ரூத் சோஷியல்' பதிவு
தனது சமூக வலைதளப் பக்கமான 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளதாவது; "இனி கியூபாவிற்கு பணமோ அல்லது எண்ணெய் விநியோகமோ செல்லாது - இது உறுதி காலம் கடந்து போவதற்குள் அவர்கள் ஒரு உடன்படிக்கைக்கு வருமாறு நான் கடுமையாக வலியுறுத்துகிறேன்."
வெனிசுலாவின் முன்னாள் அதிபர்களுக்கு பாதுகாப்பு சேவைகளை வழங்கியதற்காக, கியூபா பல ஆண்டுகளாக அங்கிருந்து அதிகப்படியான பணத்தையும் எண்ணெயையும் பெற்று வந்ததாகவும், இனி அது நடக்காது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
வெனிசுலாவில் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை
கடந்த வாரம் வெனிசுலாவில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதல் குறித்து ட்ரம்ப் கூறுகையில், வெனிசுலாவை பிணைக் கைதியாக வைத்திருந்த பல 'குண்டர்கள்' அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார். இனி வெனிசுலாவிற்கு அத்தகைய பாதுகாப்புத் தேவையில்லை என்றும், அமெரிக்க ராணுவமே இனி அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கியூபாவின் எண்ணெய் தேவையில் 50 சதவீதத்தைப் பூர்த்தி செய்வது வெனிசுலா தான். நாளொன்றுக்கு சுமார் 27,000 பேரல் எண்ணெயை வெனிசுலா கியூபாவிற்கு வழங்கி வந்தது. தற்போது வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளார். தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸை வலியுறுத்தி, வெனிசுலா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புவதில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதனால் கியூபாவிற்குச் செல்லும் எண்ணெய் விநியோகம் முற்றிலுமாகத் தடைபட்டுள்ளது, இது அந்த நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் எனக் கருதப்படுகிறது.
வெனிசுலாவில் நடந்தது என்ன?
கடந்த ஜன.3-ம் தேதி, அமெரிக்க ராணுவம் "ஆபரேஷன் அப்சல்யூட் ரிசோல்வ்" (Operation Absolute Resolve) என்ற பெயரில் ஒரு நடவடிக்கையைத் தொடங்கியது. இதில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரை அமெரிக்கப் படைகள் கைது செய்தன. 2024 வெனிசுலா தேர்தலில் மதுரோ முறைகேடு செய்து வெற்றி பெற்றதாகவும், அவர் போதைப்பொருள் பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
கியூபாவின் பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல் மிகுந்த அழுத்தத்தில் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், "கியூபா அரசு விரைவில் வீழ்ந்துவிடும்" என்ற ட்ரம்ப்பின் கணிப்பை உளவுத்துறை அறிக்கை முழுமையாக உறுதிப்படுத்தவில்லை என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
source https://tamil.indianexpress.com/international/make-a-deal-before-its-too-late-trump-threatens-cuba-days-after-venezuela-attack-10990284





