செவ்வாய், 22 செப்டம்பர், 2026

பல்கலை. நில விவகாரம்: மாற்று நிலத்தை ஏன்பரிசீலிக்க கூடாது? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

 source https://tamil.indianexpress.com/tamilnadu/sastra-university-land-encroachment-case-supreme-court-orders-tn-govt-12561652


supreme court xy

மாணவர்களின் கல்வியைக் கருத்தில் கொண்டு, இது குறித்து உயர்மட்ட ஆலோசனை நடத்தி பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சாஸ்த்ரா பல்கலைக்கழக நில ஆக்கிரமிப்பு தொடர்பான விவகாரத்தில், சர்ச்சைக்குரிய நிலத்திற்குப் பதிலாக பல்கலைக்கழக நிர்வாகம் வழங்கும் மாற்று நிலத்தை ஏற்றுக்கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படும் 31.37 ஏக்கர் நிலத்திற்குப் பதிலாக, அவரிடமிருந்து வேறு நிலத்தைப் பெற்றுக்கொள்வது குறித்து தமிழக அரசு ஏன் பரிசீலிக்கக் கூடாது என கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், இது தொடர்பாக உயர் மட்ட அளவில் ஆலோசனை நடத்தி பதில் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் பின்னணி:

தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரத்தில் திறந்தவெளி சிறைச்சாலை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த 31.37 ஏக்கர் புஞ்சை தரிசு நிலத்தைச் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்து, அதில் பிரம்மாண்ட கட்டடங்களைக் கட்டி வகுப்புகளை நடத்தி வருவதாகப் புகார்கள் எழுந்தன.

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை வருவாய்த்துறை உடனடியாக மீட்க கடந்த ஜனவரி 9-ல் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற காரசார வாதம்:

இந்நிலையில், இவ்வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.   

பல்கலைக்கழகத் தரப்பு வாதம்:

பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், "தற்போது பல்கலைக்கழகம் அமைந்துள்ள நிலத்திற்குப் பதிலாக, 5 கி.மீ. தொலைவில் உள்ள பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான நிலத்தை அரசுக்கு வழங்கத் தயார்; அல்லது சந்தை மதிப்பின் அடிப்படையில் அந்த நிலத்திற்கான தொகையை அரசுக்குச் செலுத்தத் தயார்" எனத் தெரிவித்தார்.   

தமிழக அரசுத் தரப்பு வாதம்:

தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஹரிப்ரியா மற்றும் மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா ஆகியோர், 'அரசின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது' என வாதிட்டனர்.   

நீதிபதிகளின் கருத்து மற்றும் உத்தரவு:
தமிழக அரசின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், "சம்பந்தப்பட்ட இடத்தில் ஒரு பெரிய கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது; ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி இதில் அடங்கியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தைத் தமிழக அரசு நேர்மறையாகக் கருத்தில் கொள்ளலாம். ஆக்கிரமிக்கப்பட்ட இடத்திற்குப் பதிலாக வேறு ஒரு இடத்தில் நிலத்தைப் பெற்றுக்கொள்வதில் அரசுக்கு என்ன பிரச்சனை? இது தொடர்பாகத் தமிழக அரசு ஒரு தகுந்த முடிவை எடுக்க வேண்டும்" என்றனர்.   

இதனைத் தொடர்ந்து, மாநில அரசிடம் உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிக்க அவகாசம் வேண்டும் எனத் தமிழக அரசுத் தரப்பில் கோரப்பட்டது.   

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஆக்கிரமிக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருவதைக் கருத்தில் கொண்டு, அந்த இடத்திற்குப் பதிலாக வேறு நிலத்தைப் பெற்றுக்கொள்வது குறித்துத் தமிழக அரசு உயர் மட்ட அளவில் ஆலோசனை நடத்தி, தங்கள் நிலைப்பாட்டைப் பதில் மனுவாகத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.